உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இக்காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவது சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது என்று கூட கூறலாம். இந்நிறுவனம் இந்நிலைக்கு வருவதற்கு முதன்மையான காரணம் ஸ்டீவ் ஜாப்ஸின் உழைப்பு என்று நம்மில் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்நிறுவனம் வெற்றியடைந்ததற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த தோல்விகள் தான் காரணம்.
தன்னுடைய இளமைக் காலங்களில் தனக்குள் இருக்கும் திறமை என்னவென்று தெரியாமல் இந்த சமூகத்தினால் முட்டாள் என்று அழைக்கப்பட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தன்னுடைய எதிர்காலத்தை இன்னொருவர் கையில் கொடுக்காமல் அது தன் கையில் தான் இருக்கிறது என்று நிரூபிக்க முயற்சி செய்யும்போது இந்த சமூகம் மறுபடியும் அவரை முட்டாள் என்றது.

ஆனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இலக்கை நோக்கி ஓடி வாழ்வில் வெற்றி அடைந்த பின்பு அதே சமூகம் இவரை தனித்துவமானவர் என்றது.
ஸ்டீவ் ஜாப்ஸ் எப்பொழுதும் சொல்வது, “ஒரு முட்டாளாக இருக்க தயங்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த முட்டாள்தனமான சிந்தனை ஒரு நாள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உங்களைத் தனித்துவமானவராக்கும்”.

தன்னுடைய இளமைக் காலத்தில் கல்வியில் சரியான ஆர்வமில்லாமல் மந்தமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸை பலர் தோல்வியடைந்த மாணவனாக கருதினார்கள். அதனால் ஸ்டீவ் ஜாப்ஸிடம் நன்றாக படி நல்ல கல்லூரியில் சேர்; அறிவை வளர்த்துக் கொள்; உன் அறிவு மட்டுமே உனக்கு வாழ்வில் வெற்றியை தேடித்தரும் என்று பலர் கூறியிருந்தனர்.
ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸை பொருத்தவரை அறிவு என்பது வெறும் புத்தகத்தில் இருந்து வருவதில்லை, வாழ்வின் அனுபவத்தில் இருந்து வருவது. ஆகையால் தோல்வியை கண்டு என்றும் நாம் அஞ்சக்கூடாது.
எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்றும் வெற்றி உங்களுடனேயே இருக்கும்.