Specials Stories

நம் நினைவை விட்டு நீங்காத புரட்சி கவிஞர் பாரதிதாசன்!

புரட்சி கவிஞர், பாவேந்தர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தார். கனகசுப்புரத்தினம் பெற்றோர் வைத்த பெயர். இவருடைய தந்தையார் கனகசபை முதலியார் பெரிய வணிகர், தயார் இலக்குமி அம்மாள்.

புதுவையை பூர்வீகமாக கொண்ட பாரதிதாசன் சிறு வயதில் பிரெஞ்சு மொழி பள்ளியில் படித்தார். இருந்தாலும், தமிழ் மொழிப் பள்ளியிலே அதிக காலம் படித்தார். தமிழ் மொழி பற்றும் அவருடைய முயற்சியால் பெற்ற தமிழ் திறமையும் கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற வைத்தது என்று சொன்னால் அது மிகை இல்லை. அவருடைய 18 வயதில் தமிழாசிரியரானார்.

அவருக்குள் இருந்த இசை உணர்வும், நல்லெண்ணமும் கவிதை வடிவில் வெளிப்பட்டது. பாரதிதாசன் தன் சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்கள் எழுதி தன் சக மாணவர்களிடம் பாடிக்காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்கு பின் சுப்ரமணிய பாரதியாரின் நாட்டுப்படலை பாடினார் கவிஞர்.

அந்த விருந்துக்கு பாரதியாரும் வந்திருந்தது பாரதிதாசனுக்கு தெரியாது. கவிஞர் பாடிய பாடலே பாரதிக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தது. இருந்தாலும் அதற்கு முன்பே கவிஞர் பாரதியாரை கண்டு ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!’ என்ற பாடலை பாடியதாக பாரதி தன் தராசு இதழில் பெயர் சொல்லாமல் எழுதியிருந்ததும், அவர் தான் இந்த கவிஞர் என்பதும் உறுதியானது.

புதுவையில் வெளியான தமிழ் ஏடுகளில், “கண்டழுதுவோன்”, “கிறுக்கன்”, “கிண்டல்காரன்”, “பாரதிதாசன்” என பல புனைப்பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிர தொண்டரான பாரதிதாசன் பெரியாரின் கருத்துக்களை தன்னுடைய பாடல்களில் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும், திரைப்பட கதாசிரியருமான, கவிஞருமான பாரதிதாசன் தன்னை அரசியலிலும் ஈடுபடுத்திக் கொண்டார். புதுவை சட்டமன்றத்தில் 1954 இல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

பாரதிதாசனாரின் இந்த வரிகள் நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காதவை.

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது மரணத்திற்குப் பின் 5 ஆண்டுகள் கழித்து 1969-ல் அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. பாரதிதாசனாரின் வாழ்வும் வாக்கும் என்றும் நினைவை விட்டு அகலாதவை.

Article By Vallimanavalan Rj