Cinema News Stories

கேன்ஸ் திரைப்பட விழாவில் கெத்து காட்டிய இந்தியர்கள்!

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் மே மாதங்களில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் குறும்படங்கள், திரைப்படங்கள், டாக்குமெண்ட்ரி என உலகின் பல நாடுகளின் படங்கள் திரையிடப்படுவதோடு பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப் படுகின்றன.

மேலும் படைப்பாளர்கள், நடிகர்கள் என சினிமா உலகத்தை சார்ந்த பெரும்பாலோனோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பார்கள். இதனாலேயே கேன்ஸ் திரைப்பட விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இதன் விருதுகள் Oscar போன்ற ஒரு உயரிய விருதாகவும் கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய படங்களும் பங்கேற்பது உண்டு. இருந்தாலும் குறிப்பாக இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழா இந்தியர்களுக்கு ஒரு சிறந்த வருடமாக அமைத்துள்ளது, ஏனெனில் சமீபத்தில் நடந்த 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் எட்டு இந்தியா மற்றும் இந்தியாவை சார்ந்த படங்கள் திரையிடப்பட்டதில் வெவ்வேறு பிரிவுகளில் இந்தியாவை சேர்ந்த 3 கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாவது மிக முக்கிய விருதான Grand Prix (Grand Prize of the Festival) விருதினை மலையாள-இந்தி மொழித் திரைப்படமான ‘All We Imagine As Light’ வென்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பாயல் கபாடியா இயக்கியுள்ளார். 30 வருடங்களுக்கு பிறகு இந்த பிரிவில் இந்திய திரைப்படம் போட்டியிட்டுள்ளது.

மேலும் Grand Prix விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் இது தான். மும்பையில் ஒரே வீட்டில் வசிக்கும் வெவ்வேறு வயதுடைய மூன்று பெண்களுக்கு இடையேயான நட்பைப் பற்றிய இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டு முடிந்ததும் ரசிகர்கள் எட்டு நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டை தெரிவித்துள்ளனர்.

அடுத்து பல்கேரிய இயக்குனர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கிய “”The Shameless”” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இந்திய தயாரிப்பு வடிவமைப்பாளரும், நடிகையுமான அனசூயா சென்குப்தா Un Certain Regard பிரிவில் சிறந்த நடிகைக்கான பரிசை வென்றார், இப்பிரிவில் விருதை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அனசூயா சென்குப்தா பெற்றார்.

பாலியல் தொழிலின் இருண்ட உலகத்தில் வாழும் இரண்டு பாலியல் தொழிலாளர்களுக்கு இடையிலான பிணைப்பை காட்டுகிறது “The Shameless”. மூன்றாவது விருதாக Film and Television Institute of India(FTII) மாணவர் சிதானந்த எஸ் நாயக் இயக்கிய “Sunflowers Were the First Ones to Know” என்ற animation திரைப்படம், மாணவர்களுக்கான La Cinef (film school fiction or animated films) பிரிவில் முதல் பரிசை வென்றது.

இதே பிரிவில் இந்திய வம்சா வழியை சார்ந்த மான்சி மகேஸ்வரி இயக்கிய “Bunnyhood” என்ற அனிமேஷன் படம் மூன்றாம் பரிசை வென்றது. ஒரு வயதான பெண் சேவலைத் திருட சென்றதால் கிராமத்தில் சூரியன் உதிப்பதை நிறுத்திக் கொள்கிறது என்ற ஒரு கன்னட நாட்டுப் புறக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் “Sunflowers Were the First Ones to Know”.

77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலும் சில இந்திய வம்சாவளியை சேர்ந்த கலைஞர்களும் விருதுகளை பெற்றுள்ளனர். விருதுகளை வென்றவர்களுக்கு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Article By Sathishkumar Manogaran