Cinema News Stories

அசுர உழைப்புக்கு அற்புத அங்கீகாரம் !!!

2019-ஆம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் தனுஷ் (அசுரன்), மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்) , மாஸ்டர் நாக விஷால் (KD), இசையமைப்பாளர் டி.இமான் (விஸ்வாசம்) ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை மட்டுமின்றி நடுவர்களின் சிறப்பு விருதை பார்த்திபனின் “ஒத்த செருப்பு” திரைப்படம் வென்றது.

விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் இருந்தே சமூக வலைதங்களில் விருதுகள் வென்ற அனைவருக்கும் ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தமிழ் சினிமா நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு இத்தனை விருதுகளும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதிவில் ‘அசுரன்’ படப்பிடிப்பை குறித்த ஒரு தகவலை தனுஷின் அக்கா தனது Insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவில், நடிகர் தனுஷ் அசுரன் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியான ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியில் நடிக்கும் போது அவருக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது என குறிப்பிட்டுள்ளார் . அந்த காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் தன்னை அர்ப்பணித்து தனுஷ் நடித்ததற்கு கிடைத்த அங்கீகாரமே இந்த விருது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அசுரன் திரைப்படம் வெளியானபோதே ரசிகர்கள் தனுஷின் நடிப்பை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அந்த நடிப்பிற்கு பின்னால் இவ்வளவு தியாகம் இருக்கிறது என்பது வியக்கத்தக்க விஷயமே. திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல் அதற்கு பின்னால் இது போன்ற தியாகங்களும் உள்ளது என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டு கலைஞர்களை கொண்டாட வேண்டும் என்பதே திரைத்துறையினரின் ஆசை. அதுவே அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமும் ஆகும்.

தனுஷின் அக்கா டாக்டர் கார்த்திகா கிருஷ்ணமூர்த்தியின் Insta பதிவை கீழே காணுங்கள்.