Cinema News Stories

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பதைப் போன்று, கவியரசு வைரமுத்துவுக்கு பிறந்த இரண்டாவது மகனான “கபிலன் வைரமுத்து” தன் தந்தையைப் போலவே, தனது அண்ணனை போலவே தமிழ் சினிமாவிலும், கவிதை உலகத்திலும் தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு தன்னுடைய எழுத்து பாதையில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞர்.

“கவியரசு வைரமுத்து”, “பொன்மணி வைரமுத்து” தம்பதிகளின் இரண்டாவது மகனாக பிறந்த “கபிலன் வைரமுத்து” ஆஸ்திரேலியாவில் உள்ள “குயின்ஸ் லேன்ட் பல்கலைக் கழகத்தில்” பட்டம் பயின்ற பிறகு மென்பொருள் துறையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்பு, தனக்கான வாழ்க்கை இது அல்ல என்பதை உணர்ந்து கொண்டு எழுத்து உலகில் பிரவேசித்தார்.

ஊடகத் துறைக்கு வந்த கபிலன் புதிய தலைமுறை செய்தி நிறுவனம் தொடங்குவதற்கு மிக முக்கியமான பின்னணியாக அமைந்தார், அதில் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் விளங்குகினார். இப்படி ஊடகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே தன் குருதியில் கலந்து போன கவிதையிலும் தனக்கான இடத்தை நிரப்ப தொடங்கினார்.

உலகம் யாவும் என்றான் ‘கவிஞன் ”மனிதனுக்கு அடுத்தவன்’ ‘கடவுளோடு பேச்சு வார்த்தை’ ‘கவிதைகள் 100’ போன்ற பல கவிதை தொகுப்புகளை வெளியிட்ட கபிலன், “கதை” என்ற சிறுகதையையும் “அம்பாரத்தூணி” என்ற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டு இருக்கிறார். அதே போன்று ”பூமரங் பூமி” “உயிர்ச்சொல்” “மெய்நிகரி ” போன்ற நாவல்களையும் எழுதி இருக்கின்றார்.

திரைத்துறையை பொறுத்தவரை கபிலன் வைரமுத்துவின் பங்களிப்பு அபாரமாக இருக்கிறது . 2017 இல் வந்த “கவண்” திரைப்படம் மெய்நிகரி என்ற அவரது முந்தைய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் அவர் திரைக்கதை ஆசிரியராக பரிமளித்தார். அதேபோன்று விவேகம், அசுரகுரு, தட்றோம் தூக்குறோம், தள்ளிப் போகாதே, சிங்கப் பெண்ணே, இந்தியன் 2 போன்ற படங்களில் திரைக்கதை ஆசிரியராக திகழ்ந்துள்ளார்.

தன் அப்பாவை போலவே பாடல்களிலும் பரிமளிக்க தொடங்கிய கபிலன் வைரமுத்து, உதயம் NH4, வெண்ணிலா வீடு, சிவப்பு, பொறியாளன், ஜீவா, அனேகன், ஆயிரத்தில் இருவர், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், அர்த்தனாரி, இந்திரஜித், பேய்கள் ஜாக்கிரதை, களம், கவண், விவேகம், டிராபிக் ராமசாமி, இமைக்கா நொடிகள், காப்பான் , வந்தா ராஜாவா தான் வருவேன், ஜூலை காற்றில், கோமாளி, தட்றோம் தூக்குறோம், அசுரகுரு, நான் சிரித்தால் ,நானும் சிங்கிள்தான் தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற பல படங்களில் பாடல் ஆசிரியராக பல பாடல்களை எழுதி இருக்கிறார்.

இதை தவிர “இளைஞர்கள் என்னும் நாம்” என்ற டாக்குமெnடரியையும் எடுத்து இருக்கின்ற கபிலன் வைரமுத்து என்ற இளம் எழுத்தாளருடைய பிறந்த தினம் மே 29. அவரது தந்தையைப் போல அண்ணன் மதன் கார்க்கியை போன்று சினிமா உலகிலும் எழுத்து உலகிலும் தன்னுடைய படைப்பை இன்னும் ஆழமாக பதியச் செய்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இலக்கிய உலகிலும் மென்மேலும் வளர வேண்டும் என்று அவரது பிறந்த நாளான இன்றைய தினத்தில் சூரியன் எப்எம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Article By RJ K S Nadhan