Cinema News Stories

என்றுமே சாக்லேட் பாய் பிரசாந்த்!

பொதுவா, தமிழ் சினிமால வாய்ப்பு தேடி போறவங்க தான் அதிகம்; ஆனா தமிழ் சினிமா வாய்ப்பே ஒருத்தரைத் தேடிப் போறதுங்கிறது ஆயிரத்துல ஒருத்தருக்குத் தான் நடக்கும்… அந்த ஆயிரத்துல ஒருத்தர் தான் எவர்கீரின் சாக்லேட் பாய் பிரசாந்த்…

80-களில் நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன், அலைகள் ஓய்வதில்லை போன்ற வெற்றிப்படங்களில் நடித்த நடிகரும், இயக்குனருமான தியாகராசனோட பையனா 1973 ஏப்ரல் 6-ந் தேதி பொறந்தாரு. சினிமா பிண்ணனி இருந்தாலும் அவரை சினிமா வாசனையே இல்லாம தான் வளத்தாரு அப்பா தியாகராசன்.

ஏன்னா அவரு பிரசாந்த் நடிகராக கூடாது. டாக்டர் ஆகணும் அப்பிடிங்கிறதுல கவனமா இருந்தாரு. அதனால் படப்பிடிப்பு தளத்துக்கு கூட ஒருநாளும் கூட்டிட்டு போகமாட்டார். ஆனா தமிழ் சினிமா பிரசாந்தை விரும்பி ஏத்துக்கிச்சு. அப்பா ஆசைப்படி பிரசாந்த் நல்லா படிச்சாரு.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிச்சு, மெடிக்கல் அட்மிஷனுக்காக காத்துட்டு இருந்த பிரசாந்தை தன்னோட படத்துல நடிக்க வைக்க கேட்டாரு இயக்குநர் ராதாபாரதி. அதுக்கு முன்னாடி வந்த பல வாய்ப்புகளை வேண்டாமுன்னு சொல்லிட்டாரு தியாகராசன்.

வைகாசி பொறந்தாச்சு ஒரு சின்ன பட்ஜெட் படம்… அது அந்த அளவுக்கு ஹிட் ஆகாது; அது மட்டுமில்லாம 30 நாள்-ல சூட்டிங் முடிச்சிருவேன்னு இயக்குநர் ராதாபாரதி சொல்லி கேட்டுக்கிட்டதால அந்த படத்துல பிரசாந்த் நடிக்க ஒத்துக்கிட்டாரு தியாகராசன். ஆனா அவரு எதிர்பாத்ததுக்கு நேர்மாறா படம் ரொம்ப ஹிட் ஆச்சு.

அதனால் அடுத்து வண்ணவண்ண பூக்கள்-ல நடிக்க பாலு மகேந்திரா கேக்க, என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியாம ஒத்துக்கிட்டாரு தியாகராசன். வண்ண வண்ண பூக்கள்-ல நடிச்சதால் குறிப்பிட்ட நேரத்துல பிரசாந்தால மெடிக்கல் காலேஜ்-ல சேர முடியல. அப்பறம் டாக்டர் ஆக வேண்டிய பிரசாந்த் ஆக்டர் ஆயிட்டாரு.

வைகாசி பொறந்தாச்சு முடிச்ச உடனேயே பெருந்தச்சன்னு ஒரு மலையாளப்படமும் பண்ணாரு. தமிழ் சினிமாவுக்கு வந்து ரெண்டே வருசத்துல ஹிந்தில ஐ லவ் யூ-ன்னு படம் பண்ணாரு. ஆர்.கே.செல்வமணி இயக்கத்துல செம்பருத்தி, சங்கர் இயக்கத்துல மாபெரும் வெற்றி பெற்ற ஜீன்ஸ், மணிரத்னம் இயக்கத்துல திருடா திருடா, சுந்தர் சி. இயக்கத்துல காமெடி ஹிட்டான வின்னர், ராசு மதுரவன் இயக்கத்துல பூமகள் ஊர்வலம் அப்பிடின்னு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் பண்ணாரு.

கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, காதல் கவிதை, பார்த்தேன் ரசித்தேன், ஹலோ, மஜ்னு, தமிழ் இப்டி பிரசாந்தோட கரியர்ல மறக்க முடியாத படங்கள அடுக்கிட்டே போகலாம். 1998-வது வருசம் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவிச்சாங்க.

அவரோட அப்பா தியாகராசன் இயக்கத்துல அவர் நடிச்ச படங்களும் அட்டகாசமா இருக்கும். தியாகராசன் அவர் இல்லாம வேற ஒருத்தரை ஹிரோவா வச்சி இயக்குன ஒரே ஹீரோ பிரசாந்த் மட்டும் தான். அதுல அப்பிடி இயக்குன முதல் படம் ஆணழகன். அது பிரசாந்துக்கு நல்ல பேரு வாங்கி தந்த படம். அது கிட்டதட்ட 90’s Kids–ஓட ரெமோன்னு சொல்லலாம்.

அடுத்து அவரோட இயக்கத்துலயே மன்னவா, ஜெய், ஷாக், பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம், ஜானி படங்கள்-ல எல்லாம் நடிச்சாரு. காதல் படங்கள்-ல நடிச்சு சாக்லேட் பாய்-ன்னு பேர் வாங்குன பிரசாந்த் வின்னர், லண்டன் மாதிரி முழுக்க முழுக்க காமெடி படங்கள்-லயும் நடிச்சாரு. அடுத்து அவரோட அப்பாவோட இயகத்துல ஹிந்தில ஹிட் ஆன அந்தாதூண் படத்தோட தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்துல நடிச்சிருக்காரு.

இந்த படம் கிட்டதட்ட ரெண்டு வருஷத்துக்கும் மேல ரிலீசுக்கு காத்திருந்து சீக்கீரமே ரிலீஸ் ஆகப் போகுது. இந்த படம் ஏற்கனவே ஹிட்டான படம் அப்பிடிங்கிறதாலயும், நவரச நாயகன் கார்த்தி, சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி அப்பிடின்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கறதாலயும், சந்தோஷ் நாராயணன் இசைங்கிறதாலயும் பெரிய எதிர்பார்போட இருக்கு. இந்த படமும் பிறந்த நாளும் பிரசாந்துக்கு ஒரு கம்பேக்-ஆ அமைய வாழ்த்துகிறது சூரியன் எஃப் எம்.

Happy Birthday Evergreen Chocolate Boy!

Article By RJ Stephen