Cinema News Stories

கண்டிப்பாக ஜெயிப்பார் “ஜெய்”

அறிமுக படத்திலேயே கவனம் ஈர்த்து, ‘இவரின் அடுத்த படம் என்ன?’ என்ற கேள்வியும் ஆர்வமும் வருவது வெகு சில ஹீரோக்களுக்கு மட்டுமே. அந்த லிஸ்ட்டில் நிச்சயம் ஜெய் இருப்பார். நல்ல ஹிட் படம் ஒன்று கொடுப்பார், பிறகு சைலன்ட் மோடுக்கு போய்விடுவார். மீண்டும் ஒரு ஹிட், சைலன்ட் மோட் என்பதுதான் ஜெய்யின் கரியர் கிராஃப்.

இப்போதும் ‘ஜெய்யின் அடுத்த படம் என்ன?’ என்ற கேள்வியும் ஆர்வமும் இருக்கிறது. பகவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். அப்படத்தில் நடிகர் விஜய்யின் தம்பியாக நடித்திருந்த ஜெய், அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படம் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து சசிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜெய்.

அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து ராஜா ராணி, வாமனன், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற ஹிட் படங்களில் ஜெய் நடித்திருந்தாலும், அவர் கோலிவுட்டில் தவறவிட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் லிஸ்டை கேட்டால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள். ஏனெனில் அவர் நடிக்க மறுத்த படங்கள் அனைத்துமே பிரம்மாண்ட வெற்றிப் படங்கள்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்து ஹிட்டான நாடோடிகள் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ஜெய் தானாம். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனதாம். அதேபோல் சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் போதே சிவா மனசுல சக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். சுப்ரமணியபுரம் படத்துக்காக தாடி வைத்திருந்ததால் அதை எடுக்க முடியாத சூழல் உருவானது அதனால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதேபோல் சிம்புவின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக திகழ்ந்து வருவது விண்ணைத்தாண்டி வருவாயா, அப்படத்தில் ஹீரோவாக நடிக்க கவுதம் மேனன் முதலில் அணுகியது நடிகர் ஜெய்யை தானாம். திரிஷாவுக்கு ஜோடி, ஏ.ஆர்.ரகுமான் இசை என பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் அந்த சமயத்தில் வரிசையாக மூன்று படங்களில் கமிட் ஆனதால் விடிவி படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

இறுதியாக ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி சென்சேஷனல் ஹிட் அடித்த ராட்சசன் படத்திலும் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ஜெய் தானாம். அதில் போலீஸ் கெட் அப்பில் நடிப்பதற்காக அவரை தயார் படுத்த சுமார் 6 மாதங்கள் ஜெய் உடன் பயணித்தாராம் ராம் குமார். ஆனால் தயாரிப்பாளர் மாறியதால் அப்படத்தில் இருந்து நடிகர் ஜெய் விலக நேர்ந்ததாம்.

கடைசியாக “லேபில்” வெப் தொடர் அவரை மீண்டும் லைம்லைட்டில் கவனிக்க வைக்கிறது. இந்த முறை ஜெய் நிச்சயம் “ஜெயிப்பார்” என்ற நம்பிக்கையுடன் அவரின் பிறந்தாளில் வாழ்த்துவோம்.

Article By Rj Kannan