Cinema News Stories

’ரிஷி பாலா நாவல்’ To ’சிம்ரன்’

சினிமாவில் ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தை எப்போதாவது தான் நடக்கும். குறிப்பாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கும் சினிமா உலகில் ஆண்கள் மட்டுமே இந்த ட்ரெண்ட் செட்டருக்கு உரித்தானவர்களாக இருப்பார்கள். அது நடிகர்களாக இருக்கலாம், இசையமைப்பாளர்களாக இருக்கலாம், பாடல் ஆசிரியர்களாக இருக்கலாம், ஆடல் ஆசிரியர்களாக இருக்கலாம்.

இப்படி எப்போதுமே ஆண்கள் நிறைந்த சினிமாவில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு சில நடிகைகள் மட்டுமே ட்ரெண்ட் செட்டர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் அப்படிப்பட்ட ஒருவரை பற்றி தான் இன்று நாம் பேசப்போகிறோம். இவர் பஞ்சாப் பெற்றோர்களுக்கு மும்பையில் பிறந்த பெண். அந்த பெண்ணின் பெயர் “ரிஷி பாலா நாவல்”.

இந்தி சினிமாவில் அறிமுகமாகி பிறகு மலையாள படங்களில் நடித்து கன்னட திரைப்படங்களில் உலா வந்து கடைசியாக தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் மற்ற மொழிகளில் அவருக்கு கிடைக்காத வரவேற்பையும் ஆதரவையும் தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் கொடுத்தார்கள். அதனால் அவர் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தார்.

யார் அந்த ரிஷி பாலா நாவல்? இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என்று எல்லோருக்குமே தோன்றும். அவருடைய சினிமா பெயரை சொன்னால் அட இவரா என்று கேட்கின்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை. 1976 ஏப்ரல் நான்காம் தேதி இதே நாளில் தான் மும்பையில் பிறந்தார் ரிஷி பாலா நாவல் என்ற “சிம்ரன்”.

ஆம் இன்று அவருடைய பிறந்த தினம்.”சிம்ரன்” முதலில் 1995 இல் “சனம் ஹரிஜெய்” என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது முதன் முதலில் நியூசிலாந்து நாட்டில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமைக்கு உரியது இந்த படம். இந்த படத்தில் தான் சிம்ரன் அறிமுகமானார்.

அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்” சூப்பர் ஹிட் முக்காப்புலா” என்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் சிம்ரன் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். அதை கண்ட நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தங்களுடைய சினிமா நிறுவனமான “ஏ பி சி எல்” தயாரித்த தேரே மேரே சப்னம்” என்ற படத்தில் சிம்ரனை நடிக்க வைத்தார்.

அந்த படம் வெளிவந்தது 1996 ல். அதற்குப் பின்பு அதே ஆண்டு அவர் மலையாள திரை உலகில் அறிமுகமானார். மம்முட்டி, விக்ரம் நடித்த “இந்திர பிரஸ்தம்” என்ற மலையாள படத்தில் சிம்ரன் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. அடுத்த ஆண்டு 1997 ல் “சிம் காரா மாறி” என்ற கன்னட படத்தில் நடித்தார்.

இப்படி தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன், 1997 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். அந்த படம் பிரபு தேவா அப்பாஸ் நடித்த “விஐபி” திரைப்படம். அதே ஆண்டு இன்னொரு திரைப்படம் வெளிவந்தது அந்த படத்தில் தான் சிம்ரனுடைய வாழ்க்கை உச்சம் நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அந்த படம் 1997 இல் “வசந்த்” இயக்கத்தில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படம். விஜய், சூர்யா நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிம்ரனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. 1998-99 ஆகிய இரண்டு ஆண்டுகள் சிம்ரனுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டுகளாக பார்க்கப்படுகிறது.

அந்த ஆண்டுகளில் தான் அஜித்துடன் இணைந்து “அவள் வருவாளா”, தமிழ்நாடு அரசின் சிறந்த படமாக கருதப்பட்ட “நட்புக்காக “படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். 99வது ஆண்டு அவருக்கு இன்னொரு முக்கியமான ஆண்டு. கனவே கலையாதே, ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் அவர் நடித்தார்.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் சிம்ரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்த ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த “வாலி” திரைப்படம் சிம்ரனுக்கு சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வாங்கிக் கொடுத்தது. இப்படி தமிழில் மிக முக்கியமான நடிகையாக உச்சம் நோக்கி உயர்ந்தார்.

2000வது ஆண்டில் வெங்கடேஷ், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ‘கலி சுண்டமரா’ என்ற தெலுங்கு படத்துக்கு சிறந்த தெலுங்கு மொழி படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதே நேரத்தில் அதே ஆண்டில் வெளிவந்த யுவராஜ் மற்றும் சீமா சிம்மம் என்ற இரண்டு தெலுங்கு படங்களும் அடுத்தடுத்து தோல்விகளை தழுவியது.

ஆனால் 2001 இல் வந்த “டாடி” என்ற தெலுங்கு படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. மீண்டும் தமிழில் அவர் உலா வந்தது 2001 ஆம் ஆண்டு. “பார்த்தாலே பரவசம்” படம் மூலம் தமிழ் உலகில் கால் பதித்தார். ஐ லவ் யூ டா, உதயா, உன்னைக் கொடு என்னை தருவேன், பம்மல் கே சம்பந்தம், பிரியமானவளே, தமிழ், அரசு, நியூ, பஞ்சதந்திரம் என அடுத்தடுத்த படங்களில் சிம்ரன் கதாநாயகியாக நடித்து எல்லா படங்களும் வெற்றி பெறுவதற்கு இவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

2002 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” படம் மிகச்சிறந்த மாநில மொழி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் இந்த படம் பெற்றது. இதில் மிகச்சிறப்பான நடிகையாக நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருதையும் சிம்ரன் பெற்றார்.

இப்படி உச்ச நடிகையாக இருந்த சமயத்தில் தான் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. 10 ஆண்டுகளில் 74 திரைப்படங்களில் நடித்த சிம்ரன் மீண்டும் சினிமாவில் வந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2002 இல் மாதவனுடன் இணைந்து “ராக்கெட்ரி” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோன்று” வாரணம் ஆயிரம்” படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பெற்றார். விளம்பர திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டிக் கொண்டிருக்கின்ற சிம்ரன் தன்னுடைய நடனத்தாலும் நடிப்பாலும் ஆடை வடிவமைப்புகளாலும் ஒரு ட்ரெண்ட் செட்டராக தமிழ் சினிமாவில் இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

மிக வேகமான வளர்ச்சி அடைந்து உச்சத்தை தொட்ட, அழகும் திறமையும் வாய்ந்த சிறந்த நடிகையான சிம்ரனின் பிறந்த தினமான இன்று அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது சூரியன் எப் எம்.

Article By RJ K S Nadhan