இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் பங்கு பெற்ற சூரியன் FM நேர்காணலில், நமக்கு தெரியாத நிறைய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்பொழுது வீரபாண்டியபுரம் திரைப்படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கூறத் தொடங்கியவர், “ஜெய் ஒரு இசைக் குடும்ப வாரிசு. நாங்கள் குற்றம் குற்றமே எனும் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஜெய் உடன் ஒரே சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். அந்த சமயத்தில் ஹோட்டல்கள் கிடையாது.
அப்போது ஜெய் அடிக்கடி கீ போர்டை வைத்து என்னவோ செய்து கொண்டிருப்பார். சும்மா ஜாலியாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என நினைத்தேன். அவர் நன்றாக சமைப்பார். நடிகர் பாலா சரவணனும் நன்றாக சமைப்பார். அப்படி ஒரு நாள் சமைத்து சாப்பிட அமர்ந்து விட்டு ஜெய்யை கூப்பிடும் போது, ஒரு சிறிய வேலை உள்ளது முடித்து விட்டு வருகிறேன் என கூறினார். என்ன வேலை என கேட்டேன். ஒரு ட்யூன் அனுப்ப வேண்டும் என்றார்.
ட்யூனா என ஆச்சரியமானேன். அதாவது அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த வெப் சீரிஸுக்கு ஒரு ட்யூன் கேட்டதாகவும், அதற்காக ட்யூன் தயார் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உங்களுக்கு மியூசிக் தெரியுமா என கேட்டேன்.

அதற்கு, இசையமைப்பாளர் தேவா அப்பா என்னுடைய பெரியப்பா தானே, நான் 5 வயதிலிருந்தே ஸ்டூடியோவுக்கு சென்று வருவேன் என்றார். அட ஆமால்ல என ஆச்சரியமானேன். சரி என்னென்ன ட்யூன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். சாப்பிட்டு முடித்த பின் ஒவ்வோரு ட்யூனாக போட்டு காண்பித்தார்.
அனைத்தும் நகர்ப்புறம் சார்ந்த ட்யூன்களாக இருந்தது. அதே சமயம் அதில் ஒரு வித ஈர்ப்பும் இருந்தது. உடனே வீரபாண்டியபுரம் படத்திற்கு இசையமைக்குமாறு கூறினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியாக சரி என்றார். இப்படித்தான் இந்த மேஜிக் நடந்தது” என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் மேலும் பல்வேறு விஷயங்கள் மற்றும் அவருடைய திரை வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் கூறினார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :