Cinema News Stories

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்துள்ளார்.

இந்தியாவிலேயே பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். அதற்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமல்ஹாசன் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் மற்றும் 2007ல் வெளியான ‘சிவாஜி ; தி பாஸ்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை என இவையெல்லாம் இந்த மியூசியத்தில் காணப்படும் மேலும் கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும்.

இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ் குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை பார்வையிட்டார்.

Article By MaNo