70-களின் மத்தியில், தமிழ் சினிமா தன்னை பலவிதங்களில் புதுப்பித்துக் கொண்டது. புதிய நடிகர்களின் வரவு, இளம் இசையமைப்பாளர்களின் புதுவிதமான இசை, விதவிதமான கதைகளையும் கதைக்களங்களையும் கொண்ட இயக்குனர்கள், அதுவரை அரங்குக்குள் அடைபட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமா இந்த இளம் கலாச்சாரத்தினால் கிராமங்களில் சிறகு விரித்து பறந்தது.
இப்படி புதிய பரிமாணத்தில் பயணிக்க தொடங்கிய காலகட்டத்தில் தான் சினிமா கனவுகளில் ஊறிப் போயிருந்த, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அந்த இளைஞன் கோடம்பாக்கத்தில் கோட்டை கதவை தட்டிப் பார்த்தார்.
எந்த ஒரு திரைப்படத்தின் வெற்றியிலும் இயக்குனர் பங்கு எவ்வளவு அதிகமோ அதே அளவுக்கு அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியருக்கும் சம அளவு பங்கு இருக்கிறது. ஏனென்றால், ஒரு திரைக்கதை ஆசிரியரால் தான் ஒரு கதையை சினிமாவிற்கு ஏற்றார் போல லாவகமாக மாற்ற முடியும். வெள்ளைத்தாளில் அவர் உருவாக்கும் திரைக்கதை தான் வெள்ளி திரையில் மின்னும்.
இப்படி, தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த திரைக்கதை ஆசிரியராக மட்டுமல்லாமல், ஒரு வசனகர்த்தாவாக, ஓர் இயக்குனராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக என பல அவதாரங்களை கொண்டவர் தான் நமது நாயகன்
“கே. பாக்யராஜ்”.
1977-ல் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட’16 வயதினிலே’ படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக கால் பதித்த பாக்யராஜ், பாரதிராஜாவின் அடுத்தடுத்த படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும், உதவி இயக்குனராகவும், வசன கர்த்தாவாகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
பாரதிராஜாவின் ஆரம்ப கால படங்களில் 3 நிமிடம் மட்டும் வந்து போகின்ற முகம் தெரியாத முகவரியற்ற கதாபாத்திரத்தில் நடித்த பாக்கியராஜை, தனது புதிய வார்ப்பு படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூச வைத்து அழகு பார்த்தார் குருநாதர் பாரதிராஜா. ஒரு சினிமா நடிகராக வலம் வந்தாலும் பாக்யராஜுக்குள் ஒளிந்திருந்த இயக்குனர் ஆசை அனல் மூட்டிக்கொண்டே இருந்தது. 1979இல் அதற்கான காலம் வந்தது.
சுவர் இல்லாத சித்திரங்கள் படம் தான் பாக்யராஜ் இயக்கிய முதல் படம், முழுக்க நகைச்சுவையை அள்ளி தெளித்திருந்தாலும், முடிவில் சோகமாக படம் முடிந்திருக்கும். படம் பெரும் வெற்றி என்றாலும், முடிவு மகிழ்ச்சியாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாரோ என்னவோ அதற்குப் பிறகு பாக்யராஜின் அத்தனை படங்களும் சுபமாகவே நிறைவு பெற்றிருக்கிறது.
அடுத்ததாக பாக்யராஜ் இயக்கம், நடிப்போடு தயாரிக்கவும் செய்த படம் ஒரு கை ஓசை. 1981 இல் அவர் இயக்கத்தில் வெளிவந்த மௌன கீதங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வெற்றி நடை போட்டது. மௌன கீதங்கள் இந்தியில் ஏக் ஐ பூல் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அடுத்த ஆண்டு 1981 இல் இன்று போய் நாளை வா படத்தை இயக்கிய பாக்யராஜ் தமிழ் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்தார்.
அடுத்து விடியும் வரை காத்திரு படத்தில் ஆன்டி ஹீரோவாக வலம் வந்த பாக்கியராஜ், அடுத்த படமான அந்த ஏழு நாட்கள் படத்தில் அப்பாவி பாலக்காட்டு மாதவனாக வந்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். இப்படி பாக்யராஜின் அத்தனை படங்களும் ரசிகர்களின், குறிப்பாக பெண்களின் பேராதரவோடு பெரும் வெற்றி பெற்றன.
1982 பாக்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டு வெளிவந்த டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த சக நடிகையான பூர்ணிமாவை தன் முதல் மனைவி ‘ப்ரவீணா’வின் இறப்புக்கு பிறகு, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
1982 ஆம் ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு என்றால், 1983 அவரின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. ஆம் அந்த வருடம் தான் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘முந்தானை முடிச்சு’ படம் வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற்றது. இதில் நடிகை ஊர்வசியை அறிமுகம் செய்த பாக்யராஜ் 1985 இல் சின்ன வீடு படத்தில் ஊர்வசியின் அக்கா கல்பனாவை அறிமுகம் செய்து வைத்தார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து பாக்யராஜ் இயக்கி நடித்த ‘தாவணிக் கனவுகள்’ படமும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. 1988 இல் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்த பாக்யராஜ் அதிலும் சிறப்பாகவே செயல்பட்டார்.
25 படங்களுக்கு மேல் இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் ஏறக்குறைய எல்லா படங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றியவர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனராக இருந்த பாக்யராஜ் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்புகளை இழந்தார். அதே நேரத்தில் இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் இன்னும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
இயக்குனர், நடிகர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என இதையெல்லாம் தாண்டி ‘பாக்யா’ என்னும் வார இதழையும் வெற்றிகரமாக நடத்தியவர். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தன்னை தவிர்த்து விட்டு, தமிழ் சினிமா இருக்க முடியாது என்பதை நிரூபித்து மாபெரும் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கே.பாக்யராஜுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை காற்றலையில் பறக்க விடுவதில் சூரியன் FM பெருமிதம் கொள்கிறது.