விசித்ரா திரைப்பட துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். விசித்திரமானவர், பிறர் மனம் அறியும் வித்தகி.
இவர் திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியவர். நகைச்சுவை, குணச்சித்திரம், எதிர்நாயகி என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது போர்க்கொடி திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை, அதற்கு பிறகு ஜாதிமல்லி படத்தில் நடித்தார். இயக்குனர் பிரதாப் போத்தனின் ஆத்மா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.
அந்த திரைப்படம் விசித்ராவுக்கு நல்ல பட வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தது என்று தான் கூற வேண்டும். ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், வீரா, மணிரத்னம், வண்டிச்சோலை சின்ராசு, அமைதிப்படை இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1995-ல் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் ரதிதேவி எனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.
மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். நடிகை விசித்ரா மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படத்தில் நடித்த வில்லியம்ஸ் என்பவரின் மகள். விசித்ராவுக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். விசித்ரா பத்தாவது படிக்கும் போது திரைத்துறைக்கு வந்ததால் படிப்பினை தொடர முடியவில்லை. பிறகு தபால் முறை படிப்பின் மூலமாக பி.ஏ.சைக்கலாஜி, எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் ஆகிய படிப்புகளை முடித்தார். விசித்ரா ஒரு உளவியல் நிபுணர்.
இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டுவிட்டு புனேவில் தங்கிவிட்டார். 2001 இல் விசித்ரா, ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். 1991-ல் திரையுலகுக்கு நடிக்க வந்த நடிகை விசித்ரா 2002 இரவுப்பாடகன் வரை பல படங்களில் நடித்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
விசித்ரா தற்பொழுது தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் முக்கியமான ஒருவராக பெயர் பெற்றுள்ளார். தொடரட்டும் அவர் கலைப் பயணம்.