Specials Stories

உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஒரு திருவிழா

உலகம் முழுக்க ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது என்றால், அது கிறிஸ்துமஸ் தான். உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி இருக்கின்ற கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இந்த விழா, இயேசுவின் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவிற்கு முந்தைய நாட்களில் கேரல் பாடல்கள், பரிசுப் பொருட்களின் பரிமாற்றங்கள் என விழா களை கட்டும். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாதிரியான விழாக்கள் கொண்டாடுவது ஐரோப்பாவில் பல பகுதிகளில் வழக்கமாக இருந்திருக்கிறது.

குளிர்காலத்தை வரவேற்கின்ற விதமாக ரோம பேரரசின் ஆட்சி காலத்தில் “சடூர் நலியா” என்ற பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும், சிறுவர்களுக்கு பொம்மைகளும் பரிசாக வழங்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

சனி கடவுளை வணங்கும் விதமாக கொண்டாடப்பட்ட இந்த விழாவின் போது விருந்துகள், மது பரிமாற்றங்கள், ஆடல் பாடல்கள் என களியாட்டங்கள் மிகுந்திருந்தன. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அப்போது அடிமைகளும் விழாக்களில் பங்கேற்கலாம் என்ற சிறப்புச் சலுகை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதேபோன்று கிமு 222 முதல் கிமு 270 வரை ரோமில் “நாட்டலிஸ் சோலிஸ் இன் விட்டி” என்ற விழா சூரியனை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டது? சிரியாவிலும் குளிர் காலத்தில் சூரியனை வழங்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

இப்படி கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குளிர்கால கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இயேசுவின் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி குளிர் காலத்தில் வருவதால் பழைய பண்டிகைகளின் தன்மைகளையும் இணைத்துக் கொண்டு இப்போது நடைமுறையில் இருக்கின்ற பல விஷயங்களோடு கிறிஸ்துமஸ் பண்டிகை மேலும் சிறப்பாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றது.

விழாக்களும் பண்டிகைகளும் என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமல்ல. அது மதங்களை தாண்டி இனங்களைத் தாண்டி மொழிகள் நிறங்களை தாண்டி என மனித குலத்தின் வளர்ச்சிக்கு ஆணி வேராக அதே சமயத்தில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக முட்டுக்கட்டையாக இருக்கின்ற விரோதங்கள் குரோதங்கள் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை களைந்து அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு ஒருவரோடு ஒருவர் மனரீதியாகவும் எண்ணங்கள் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கலந்து உறவாடுவதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாகத்தான் இந்த பண்டிகைகள் இருக்கின்றன.

இதற்கு கிறிஸ்துமஸ் தினமும் விதிவிலக்கு அல்ல. கிறிஸ்துமஸ் தினத்தில் இயேசுவின் போதனைகளான அன்பையும் அறத்தையும் ஏற்று உலகம் முழுக்க சகோதரத்துவத்துடனும் நட்புடனும் அன்புடனும் நம்முடைய எண்ணங்களை அன்பை பரிமாறுவோம் என்று சூரியன் FM நேயர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.

Article By RJ K.S.Nathan