Specials Stories

இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழினம்!

விளைந்த நெல்லுக்கும், விளைவித்த மண்ணுக்கும், உடன் உழைத்த விலங்குக்கும், ஒளி கொடுத்த சூரியனுக்கும் நன்றி சொல்லி விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம். அப்படி தமிழ் இனத்தால் கொண்டாடப்படுகின்ற மிக முக்கியமான திருவிழாவாக போற்றப்படுகிறது பொங்கல் திருநாள்.

தமிழ் ஆண்டில் பத்தாவது மாதமான தை மாதத்தின் முதல் நாளில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறைந்தபட்சம் 4 முதல் 5 நாட்கள் வரை இந்த திருவிழா நடக்கும். கடந்த காலங்களில் சேர்த்து வைத்த பழைய பொருட்களையும் தேவையற்ற கழிவுகளையும் போக்கும் விதமாக போகிப் பண்டிகை என்ற பெயரில் அதை அழித்து எரித்து வீட்டையும் வீதியையும் சுத்தம் செய்வார்கள்.

இது இல்லத்தை மட்டும் சுத்தம் செய்வதற்கு அல்ல, மனதில் தேங்கியிருக்கின்ற தேவையற்ற குற்ற உணர்வுகளையும் விரோதங்களையும் கசப்பான எண்ணங்களையும் போக்கி புதிய உற்சாகத்தோடு புதிய சந்தோஷங்களோடு புது மாதத்தின் புது நாளில் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் போகிப் பண்டிகையில் பழையன கழிக்கப்படுகின்றன, புதிய வரவேற்கப்படுகின்றன.

அடுத்த நாள் அதிகாலையில் உலகம் முழுவதற்கும் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் கொடுத்து உலக உயிர்கள் அத்தனையும் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக விளைந்த நெல்லையும் இனிப்பான வெல்லத்தையும் மணக்கும் ஏலக்காயையும் முந்திரி திராட்சையோடு கலந்து புது பானையில் பொங்க விட்டு, சூரியனுக்கு குலவியிட்டு நன்றி சொல்லும் அந்த தருணம் தான் பொங்கலின் உச்சபட்ச கொண்டாட்டம்.

பொங்கிய பொங்கலை சூரியனுக்கும் கடவுளுக்கும் படைத்து வைத்து, நட்புகளுக்கும் உறவுகளுக்கும் விருந்து வைத்து, ஆடிப்பாடி மகிழ்வுடன் இருப்பது பொங்கல் தினத்தில் சிறப்பம்சம். அதற்கு பிறகு அடுத்த நாள் விலங்கு என விலக்கி வைக்காமல், தன்னுடைய உழைப்பிலும் உயர்விலும் தன்னுடன் எல்லா தருணங்களிலும் உடன் வந்த எருதுகளுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல்.

மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவைகளுக்கு நறுமணப் புகை ஊட்டி பொட்டிட்டு மாலையிட்டு பொங்கல் படைத்து இனிப்பு ஊட்டி அவைகளை தன்னுடைய உடன்பிறப்பாக போற்றுகின்ற ஒப்பற்ற திருவிழா தான் தமிழினத்தால் கொண்டாடுகின்ற மாட்டுப் பொங்கல்.

அடுத்த தினத்தில் ஆற்றங்கரைகளில் பூக்கள் பறிக்க பூவையர் செல்லும் காணும் பொங்கல். இப்படி நான்கு அல்லது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற இந்த பொங்கல் திருவிழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் பேசுகின்ற மக்கள் வாழுகின்ற எல்லா ஊர்களிலும் எல்லா நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இது சமீப காலங்களில் கொண்டாடப்படுகின்ற விழா அல்ல, சங்கத் தமிழ் காலங்களிலேயே இது கொண்டாடப்பட்டிருக்கின்றது. கிமு 400 ஆம் நூற்றாண்டிலேயே இது கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது. இப்படி காலம் காலமாக மண்ணுக்கு நெல்லுக்கும் சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி சொல்லி கொண்டாடும் இந்த அறுவடை நாள் உலகில் வேறு எந்த இனத்திலும் இவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் திருவிழா என்பது இத்தோடு நின்று விடுவதில்லை இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்னொன்றும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு பெயர் தான் ஜல்லிக்கட்டு. இது சங்கத் தமிழில் ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படுகின்றது.

வளர்ந்த காளைகளை அடக்குகின்ற ஒரு சிறப்பான விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. மாடுகளை ஓட விட்டு அதன் திமிலை கட்டியணைத்து அதன் கொம்புகளில் கட்டி இருக்கும் துண்டுகளை அவிழ்த்தால் அதில் சில்லறை காசுகள் என்ற சல்லி காசுகள் அவிழ்ப்பவர்களுக்கு சொந்தமாகும்.

இதுதான் சல்லிக்கட்டு என்று அந்த காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் ஜல்லிக்கட்டு என்று இப்பொழுது மருவி இருக்கிறது. ஆனால் இதற்கு உண்மையான பெயர் ஏறு தழுவுதல் என்று தான் சங்க இலக்கியங்கள் கூறுகிறது. திமில் நிறைந்த எருதுகளை 15 மீட்டர் தொலைவிற்கு தொடர்ந்து ஒவ்வொருவர் தழுவி சென்றால் அவர் வீரராக கருதப்படுகிறார்.

தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்படுகின்ற இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக பலமுறை வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்கு நல வாரியம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றது. பலமுறை இதற்கு தடை போட்டும் தமிழக அரசு இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இறுதியாக 2017-ல் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக ஒரு வரை முறைக்கு கொண்டுவரப்பட்டு கொண்டாடப்படுகிறது. அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் போன்ற பல இடங்களில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகம் முழுக்க வியப்போடு பார்க்கப்படுகிறது.

இப்படி பொங்கலும் ஜல்லிக்கட்டும் தமிழர்கள் ஒவ்வொருவரின் நரம்பிலும் ரத்தத்திலும் உணர்வோடும் உயிரோடும் கலந்து விட்ட பிரிக்க முடியாத விழாவாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட பொங்கல் நன்னாளில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அத்தனை பேருக்கும் எல்லா வளங்களும் நலங்களும் சந்தோஷங்களும் உடல் நலமும் பொங்கிப் பெருகிட அனைவருக்கும் தனது சிறப்பான பொங்கல் நல்வாழ்த்துக்களை சூரியன் FM தெரிவித்துக் கொள்கிறது.

Article BY RJ K. S. Nadhan