1972ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிறந்த வினோத் காம்ப்ளி தற்போது 54 வயதை நிறைவு செய்கிறார். இந்தியா என்றால் கிரிக்கெட் விளையாட்டு பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு நாம் கிரிக்கெட்டை நேசித்து வருகிறோம். பல தலைச்சிறந்த வீரர்களையும் நமது பாரதம் உலக கிரிக்கெட்டுக்கு வழங்கி இருக்கிறது.
பல கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுவதே மிகப் பெரிய சாதனையாக நாம் பார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற சவால்கள் மறுபக்கம் இருக்கிறது. பல வீரர்கள் சரியான திறமை இருந்தும் வாய்ப்பும், சூழலும் அவர்களின் பெயரை வரலாற்றில் பதிய வைக்காமல் செய்துவிடும். அதில் ஒருவர் வினோத் காம்ப்ளி.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரரான இவர், முதலில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தான் அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிராக 1991ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அறிமுக வீரராக களமிறங்கினார் வினோத் காம்ப்ளி.டெஸ்ட் கிரிக்கெட்டில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதியில் அறிமுகமானார்.
பள்ளி கால கிரிக்கெட் ஒன்றில் வினோத் காம்ப்ளியும் சச்சின் டெண்டுல்கரும் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்தது உலகம் முழுவதும் ஹைலைட்டானது வரலாறு. டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சமயத்தில் காம்ப்ளி, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ரஞ்சி கோப்பையில் காம்ப்ளி விளையாடியபோது சச்சின் இந்திய கிரிக்கெட்டில் தனது பயணத்தை சிறப்பாக தொடங்கிவிட்டார்.
பின்னர், காம்ப்ளியும் தனது திறமையாலும் முயற்சியாலும் இந்திய அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார் காம்ப்ளி. பின்னர் அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 227 ரன்களை அடித்து நொறுக்கினார். தொடர்ச்சியாக இரட்டை சதங்களை விளாசிய காம்ப்ளி, இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் சதம் பதிவு செய்தார்.
14 இன்னிங்ஸ்களில் காம்ப்ளி 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். 17 டெஸ்ட் ஆட்டங்களிலும், 104 ஒரு நாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ள வினோத் காம்ப்ளி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் மிகையல்ல.