Specials Stories

நடிகர் சூரி பிறந்தநாள் !!!!

நகைச்சுவை நடிகர் சூரி தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி நாயகனாக நடிக்கும் சூரி ரசிகர்களால் பரோட்டா சூரி என அன்போடு அழைக்கப்படுகிறார்.

மதுரையில் பிறந்த இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்துள்ளார். 1998 ஆம் ஆண்டு மம்முட்டி நடித்து வெளிவந்த மறுமலர்ச்சி திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் சூரி முதன்முதலில் நடித்தார். அதன் பின் சில படங்களில் தொடர்ந்து நடித்த சூரி ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் சூரியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பரோட்டா காமெடி தான் சூரியை பரோட்டா சூரி என ரசிகர்கள் அழைப்பதற்கு காரணம். அதன்பின் களவாணி, குள்ளநரி கூட்டம், வேலாயுதம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை சூரி பிடித்தார்.

குறிப்பாக சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்களில் இவர்களது Combo பெரும் வரவேற்பை பெற்றது.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து சூரி நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் சூரி நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத் தமிழன் திரைப்படம் தான் சூரி நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம் ஆகும்.

சூரியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் இணையத்தில் #HappyBirthdaySoori எனும் டேகை ட்ரெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரி அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.