ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த முதல் படமான மீசைய முறுக்கு திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இளைஞர்கள் தங்கள் கனவுகளில் சாதிக்க எவ்வளவு தடைகளை கடந்து வருகிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும்.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/07/MM-1-1024x682.jpg)
இப்படம் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஆரம்ப கால வாழ்க்கையை சிறு கற்பனைகள் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டிருக்கும். ஆதி மற்றும் அவரது நண்பர் ஜீவா எவ்வளவு தடைகளை கடந்து இசைத்துறையில் தங்களது அடையாளத்தை பதிவு செய்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை சுருக்கம். காதல், காமெடி, கல்லூரி வாழ்க்கை, சென்டிமெண்ட், கருத்து என அனைத்தையும் உள்ளடக்கிய விருவிருப்பான கமர்ஷியல் படமாக மீசைய முறுக்கு அமைந்தது.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/07/MM-2-682x1024.jpg)
இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஆத்மிகா, விவேக், விக்னேஷ் காந்த், விஜயலட்சுமி, சாரா, கஜராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நடித்து இயக்கிய ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே 2017 ஆம் ஆண்டின் ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. இப்படத்தின் டைட்டில் ட்ராக் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். அதுமட்டுமின்றி தனது கனவுகளுக்காக காதலை விட்டுக்கொடுத்த காதலனின் வலியை இப்படத்தின் இறுதியில் அமைந்த “வாடி புள்ள வாடி” பாடல் உருக்கமாக உணர்த்தி இருக்கும்.
இப்படம் தமிழில் வெளியாகி வெற்றி அடைந்ததை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு “படே ஹுளி” என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. ராப் பாடகராகவும், இளம் இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்த ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படம் மூலம் நல்ல இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/07/MM-4-1024x682.jpg)
இப்படத்தின் ஒரு காட்சியில் ஆதியின் அப்பாவாக நடித்திருக்கும் விவேக் வாழ்க்கையைப் பற்றி தன் அனுபவத்தையும் சில அறிவுரைகளையும் ஆதியுடன் பகிர்ந்து கொள்வார். அந்தக் காட்சி படம் பார்க்கும் அனைவருக்கும், தன் கனவுகளில் சாதிக்கவில்லை என்றாலும் வாழ்க்கையில் தோற்று விடக் கூடாது எனும் எண்ணத்தை விதைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு சான்றாய் அமைந்த ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கையை அழகாக பட வடிவில் படைத்த மீசைய முறுக்கு இளைஞர்களுக்கு “Energy” கொடுத்தது என்றே கூறலாம்.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/07/MM-3-682x1024.jpg)
இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் அதை ஹிப் ஹாப் ஆதியின் ரசிகர்கள் #3YearsOfMeesayaMurukku என இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்