புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. மாறுபட்ட கதை களத்தில் இரு கதாநாயகர்களை வைத்து உருவான படம் விக்ரம் வேதா.
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் விக்ரமாதித்தன் மற்றும் வேதாளம் கதாபாத்திரங்களை மையமாக வைத்து மாதவனின் விக்ரம் கதாபாத்திரமும் விஜய்சேதுபதியின் வேதா கதாபாத்திரமும் இப்படத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, பிரேம், கதிர், ஸ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், விவேக் பிரசன்னா, மணிகண்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும். வேதா எனும் பிரபல ரவுடியை தேடி என்கவுன்டர் செய்ய மாதவன், பிரேம், அச்யுத் குமார், ராம்தாஸ், மணிகண்டன் போன்றோர் காவல்துறையின் சிறப்பு படையில் ஒரு அணியாக திரண்டு இருப்பர். .
இவர்களுக்கு எதிரணியில் அதாவது கேங்ஸ்டர் அணியில் விஜய்சேதுபதி, ஹரிஷ் பேரடி, விவேக் பிரசன்னா, ராஜ்குமார், அமரேந்திரன், சுகுந்தன் ஆகியோர் இருப்பர். வேதாவை விக்ரம் தலைமையிலான காவல்துறை அணி பிடித்ததா, என்கவுண்டர் செய்ததா எனும் கதைக்கருவை நோக்கியே இப்படம் நகரும்.
இப்படம் விஜய் சேதுபதி மற்றும் மாதவனின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையான வெற்றிப்படமாக அமைந்தது. பத்து ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்ட புஷ்கர் மற்றும் காயத்ரி தம்பதியினர் தங்களது மாறுபட்ட முயற்சியை வெற்றிக்கனியாக இப்படத்தின் வெற்றி மூலம் சுவைத்தனர். இப்படத்திற்கு சாம் C.S-ன் இசை பெரும் பங்கு வகிக்கும் விதத்தில் இருந்தது. குறிப்பாக வேதாவின் bgm 2017 ஆம் ஆண்டின் மக்கள் கொண்டாடிய மாஸ் bgm ஆக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அமைந்த டசக்கு டசக்கு, யாஞ்சி போன்ற பாடல்கள் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே 100 நாட்கள் திரையில் ஓடி சாதனை புரியும். அந்த வரிசையில் விக்ரம்வேதா திரைப்படமும் திரையில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவும் படத்தின் கதைக்கு ஏற்ப காட்சிகளை அழகாக வடிவமைத்தது.
சினிமாவிற்கு சென்று படம் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு திருப்தியான மனநிலையை விக்ரம் வேதா திரைப்படம் கொடுக்கத் தவறவில்லை. இது போன்ற வித்தியாசமான கதைகளுக்கு சினிமா ரசிகர்களிடையே எப்பொழுதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை விக்ரம் வேதா திரைப்படத்தின் வெற்றி மீண்டும் ஒரு முறை உறுதி செய்து விட்டது என்றே கூறலாம்.
இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சினிமா ரசிகர்கள் அதை இணையத்தில் #3YearsofVikramVedha #3YrsOfMegaBBVikramVedha என கொண்டாடி வருகின்றனர்.