Cinema News Specials Stories

பருத்திவீரன் பிரச்னை என்ன? கார்த்தி, சூர்யா, சிவக்குமார் மெளனமாய் இருப்பது ஏன்?

இந்த வாரம் சமூகவலைதளங்களில் பெரிய பேசுபொருளாகியுள்ள விஷயம் பருத்தி வீரன் திரைப்பட பிரச்னை தான். தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் தான் நடிகர் கார்த்தியின் அறிமுக திரைப்படம்.

சமீபத்தில் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்திற்கான நிகழ்ச்சியில், கார்த்தி உடன் பணியாற்றிய இயக்குநர்கள் அனைவரையும் அழைத்துள்ளனர். ஆனால் இயக்குநர் அமீரை அழைக்கவில்லை. இது குறித்து அமீரிடம் கேட்ட போது பருத்திவீரன் படத்தில் ஞானவேல்ராஜா உடன் ஏற்பட்ட பிரச்னை குறித்து கூறினார். மேலும் நடிகர் சிவக்குமார் குடும்பத்துடனான பழக்கத்தை ஞானவேல்ராஜா கெடுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஞானவேல்ராஜா பேட்டியளித்தார். அதில் இயக்குநர் அமீர் கடன் வாங்கியதற்காக தான் பருத்தி வீரன் படம் செய்தார். என் பணத்தை வைத்து அவர் படம் எடுக்க கற்றுக்கொண்டார் என அமீரை மோசமான வார்த்தைகளிலும் பேசியிருந்தார்.

இதையடுத்து பதிலுக்கு இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டார். அதில் ஞானவேல் ராஜா கூறுவது அனைத்தும் புனையப்பட்ட பொய், இதில் என் பக்கம் இருக்கும் நியாயத்தை பருத்தி வீரன் படத்தில் பணியாற்றியவர்கள் அறிவார்கள். அவர்கள் கூட இந்த விஷயத்தில் அமைதியாய் இருப்பது வேதனையளிக்கிறது என கூறியிருந்தார்.

பிரச்னை சூடு பிடித்த உடன் பருத்திவீரன் படத்திற்காக உதவி செய்த, அதில் பணியாற்றிய பலரும் ஞானவேல்ராஜாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

அதில், ”பருத்தி வீரன் படத்திற்காக ஞானவேல்ராஜா தயாரிப்பாளராக முதற்கட்ட படப்பிடிப்பிற்கான பணத்தை அமீரிடம் கொடுத்துள்ளார். அதன் பின் பணம் இல்லாத சூழல் உருவாக படத்தை தயாரிக்க முடியாமல் படத்திலிருந்து விலகியுள்ளார். கார்த்தியின் அண்ணன் சூர்யாவும் படத்தை தொடர என்ன செய்வது என தெரியாமல் கைவிரித்துள்ளனர். பெரியவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென இயக்குநர் அமீர் அவர் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கி படத்தை நிதானமாக எந்த சமரசமும் இன்றி எடுத்து முடித்தார்.

அதில் நாங்கள் உடன் இருந்தோம். படப்பிடிப்பில் களத்தில் இருந்த கார்த்தியே இந்த விஷயத்தில் மெளனமாய் இருக்கிறார். ஞானவேல்ராஜா இவ்வளவு வன்மமாக இருக்கக் கூடாது. எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்?” என அமீருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் நேரடியாக சம்மந்தப்பட்ட கார்த்தி, சூர்யா, சிவக்குமார் அனைவரும் இந்த விஷயத்தில் அமைதியாய் இருப்பது ஏன்? என தற்போது சமூகவலைதளங்களில் மக்கள் அனைவரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு கலைஞனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அனைத்து கலைஞர்களும் ஒன்று கூடி அவருக்கு துணையாய் நிற்பதையும் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். பருத்திவீரன் பட பிரச்னை குறித்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Article By MaNo