Specials Stories

சென்னையின் பிரம்மாண்ட திருவிழாக்கள்!

தமிழ் நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடத்தும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2023’ நிகழ்வு ஜனவரி 13 முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் தீவு திடலில் பிரம்மாண்டமாக தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது.

சென்னையில் 17 இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பல பூங்காக்களும், விளையாட்டு திடல்களும், கடற்கரை, மாநகராட்சி மைதானங்கள், கல்லூரி/பள்ளி மைதானங்கள், வணிக வளாகங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த 17 இடங்கள், தீவுத்திடல், திருவான்மியூர் கடற்கரை, எலியட்ஸ் பூங்கா பெசன்ட் நகர், நாகேஸ்வர ராவ் பூங்கா, மே தின பூங்கா சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளி, மாநகராட்சி மைதானம் தி நகர், செம்மொழி பூங்கா, மாநகராட்சி மைதானம் நுங்கம்பாக்கம், ராபின்சன் விளையாட்டு திடல் ராயபுரம், முரசொலி மாறன் மேம்பால பூங்கா பெரம்பூர், டவர் பூங்கா அண்ணா நகர், ஜெய் நகர் பூங்கா கோயம்பேடு, கலைஞர் உள்விளையாட்டு அரங்கம் வளசரவாக்கம், சிவன் பூங்கா கே கே நகர், தாங்கள் பூங்கா அம்பத்தூர், மாநகராட்சி மைதானம் குளத்தூர் ஆகும்.

இதில் 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கின்றனர். இது ஜனவரி 13 முதல் 17 வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இதற்கு அனுமதி இலவசம்.

இது ஒரு மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சியாகும். பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் அதை சார்ந்து பணியாற்றும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் இது நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவான பொங்கல் திருவிழாவினை ஒட்டி இது நடத்தப்படுகிறது.

இது இந்தியாவில் நடக்கும் குறிப்பிடத்தக்க பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும். சென்னை சங்கமம் மூலம் நாட்டுப்புற கலைஞர்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் செகத் காசுபர் ராசு ஆகியோருக்கு செப்டம்பர் 2006 இல் தோன்றியது ஆகும்.

இதன் அடுத்தகட்ட நகர்வாக தமிழ்நாட்டின் முன்னெடுப்பால் 2007 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் தொடங்கப்பட்டது. சென்னை சங்கமம் விழா சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இது நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரமாகவும், அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் அமைந்தது.

இதில் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம், மான்கொம்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல நாட்டுப்புற கலைகள் நடக்கவுள்ளது. இதில் தெருக்கூத்து போன்ற நாடக நிகழ்ச்சிகளும் அடங்கும். இது தமிழ் மண் சார்ந்த கலைகளை வளர்க்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சங்கமம் மூலம் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முடியும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

அடுத்தாண்டு சென்னை சங்கமம் தமிழ் பண்பாட்டு திருவிழா சென்னை மாநகரின் மேலும் பல இடங்களை உள்ளடக்கும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி MP கூறியுள்ளார். சென்னை சங்கமம் உலக மேடையில் தமிழ் நாடு பண்பாட்டை எடுத்து செல்லவும், தமிழ் மொழியின் முக்கியத்தும் மற்றும் தமிழ்நாட்டின் பண்பாடு தனித்துவம் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு செல்லவும் உதவும்.

சென்னையில் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா. 20 நாடுகள் பங்கேற்பு: இலச்சினை  வெளியிட்ட அமைச்சர்!

சென்னை சங்கமம் போன்றே மிகப்பெரிய மற்றொரு திருவிழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. அதுதான் 46வது சென்னை புத்தக கண்காட்சி. சென்னையின் முக்கியமான மிகப்பெரிய இந்த புத்தக திருவிழாவில் இந்த வருடம் முதல் ஒரு புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அது, சிறை கைதிகளுக்காக புத்தகம் சேகரிக்கும் முயற்சி ஆகும். கைதிகளுக்குள் மனமாற்றத்தை கொண்டுவர இந்த முயற்சியை தமிழக சிறைத்துறை நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை புத்தகத் திருவிழாவில் 286 என்ற பிரத்யேக அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கைதிகளுக்கு 'புத்தக தானம்' கவனத்தை ஈர்த்த 'அரங்கு எண் - 286'

இந்த அரங்கில் நாள்தோறும் பொதுமக்கள், பதிப்பகங்க நிர்வாகிகள், புத்தக விற்பனையாளர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் ஏராளமான புத்தகங்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெற வேண்டும் என்பது சிறைத்துறை அதிகாரிகளின் எண்ணமாக உள்ளது.

Article By Abishek.N.K