Cinema News Specials Stories

தென்னாட்டு தேவா

மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றிய ஆண்டு ‘1992’ தமிழ் சினிமாவில் நினைவுகூறப்படுகிறது. ஆனால் அந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி ரோஜா திரைப்படம் அல்ல, ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை திரைப்படம் தான்.

இந்த படத்தின் இசை மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. யாருப்பா இந்த இசையமைப்பாளர் என தேடிய ரசிகர்களுக்கு கிடைத்த தேவ ராகம் தான் தேனிசைத் தென்றல் தேவா என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம் ஆவார். தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவரை “தேனிசை தென்றல்” அல்லது “இனிமையான இசையின் தென்றல்”என்று அழைத்தார்.

1995 இல் முத்து திரைப்படத்துக்கு ரஹ்மான் இசையமைத்தபோது கூட, ரஜினியின் அனைத்து திரைப்படங்களின் தொடக்கத்திலும் தோன்றும் “சூப்பர் ஸ்டார் ரஜினி” என்னும் டைடில் இசை தேவா உடையதாக இருந்தது.., இன்று வரை ரஜினியின் டைடில் கார்டில் தேவாவின் இசை தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

1990-கள் தேவாவுக்கு சொந்தமானது. இந்த காலகட்டத்தில் தேவா 36 படங்களுக்கு மேல் இசையமைத்தார். காதல் கோட்டை, ஆசை, நேருக்கு நேர், வாலி, பிரியமுடன், நினைத்தேன் வந்தாய், குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாய் இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் உருவாவதற்கு தேவாவின் இசை என்னும் ஏணி பெரும் பங்காற்றியுள்ளது.

1950-இல் பிறந்த தேவா, மெட்ராஸ் கானா பீட்டை வணிக சினிமாவிற்கு கொண்டு வந்ததற்காக “கானாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டார்.., சிறு வயதில் இசை மீது மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தேவாவின் தந்தை ஒரு தபால்காரராக இருந்தார், தேவாவின் குடும்பம் வறுமையின் விளிம்பில் இருந்தது. தேவாவிற்கு 18 வயதாகும் வரை மயிலாப்பூரில் அவர் வீட்டில் வானொலி கூட இல்லை என்று பல நேர்காணல்களில் கூறி இருக்கிறார்..,

மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழக முதுகலை படிப்பில் தோல்வியடைந்தார்.., 1960கள் மற்றும் 1970களில் தமிழ்நாட்டில் நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. காமேஷும் ராஜாமணியும் பிரபலமான நாடக இசைக்கலைஞர்கள். அவர்களது அலுவலகத்தில் பணியாளராகச் சேர்ந்து. ஒவ்வொரு நாளும் ஒரு கச்சேரியில் இருந்து இன்னொரு கச்சேரிக்கு தாவிச் செல்ல வேண்டியிருந்ததால், அவர்களுக்கு டாக்ஸிகளைப் பெற்றுக் கொடுப்பதே தேவாவின் வேலையாக இருந்தது. தேவாவின் இசை வாழ்க்கை இங்கிருந்து தான் தொடங்கியது.

அந்த நேரத்தில், அவருக்கு இசையில் ஆர்வம் மிகுந்து இருந்தாலும் எந்த இசைக்கருவிகளை பற்றியும் தெரியாது. அதனால் யாரும் அலுவலகத்தில் இல்லாத போது ஹார்மோனியம் வாசித்து பழக ஆரம்பித்தார். அதை விரைவாக கற்றுக்கொண்டார். அந்த காலத்தில் நாடகங்களில் இடையிடையே ஹார்மோனியம் இசைக்கப்பட்டு, பார்வையாளர்கள் கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வார்கள். மெதுவாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அதை செய்ய ஆரம்பித்தார் நம் தேவா. அப்போது, சந்திரமௌலி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜீ.மகேந்திரன் போன்ற நாடக நட்சத்திரங்கள் தேவா அவர்களை ஹார்மோனியம் வாசிக்கும்படி கேட்க ஆரம்பித்தனர்.

1973-இல் அவரும் இசையமைப்பாளர் சந்திரபோஸும் சேர்ந்து போசஸ் தேவா குழுவைத் தொடங்கினார்கள்.., அதன் பின் 1977 வாக்கில் குகநாதன் இயக்கிய மதுரை கீதம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில சூழ்நிலைகள் காரணாமாக சந்திரபோஸ் தனியாக இசையமைக்க அவருக்கும் தேவா அவர்களுக்கும் மனக்கசப்பு நேர்ந்து குழு பிரிந்தது..,

அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாத தேவா.., அதற்குள் குடும்ப அழுத்தம் காரணமாக தூர்தர்ஷனில் வேலைக்கு சேர்ந்தார். ஷூட்டிங் செட் போடுவது தான் அவர் வேலை. ஒரு முறை அவர்கள் செட்டுக்கு பியானோ கொண்டு வந்த போது.., அப்போது அவருக்கு இசை பற்றிய அடிப்படை அறிவு இருந்ததால், அங்குள்ள வேலையாட்களுக்கு பொழுதுபோக்கிற்காக இரவு முழுவதும் பியானோ வாசித்து காட்டி மகிழ்விப்பார். பியானோவைத் தொட்டதற்காக 15 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு தன்ராஜ் மாஸ்டரிடம் பியானோவை முறைப்படி கற்றுக்கொண்டு.., அதே நேரத்தில், ஜே.பி.கிருஷ்ணா மாஸ்டரிடம் ஹார்மோனியத்தில் இந்திய கிளாசிக்கல் கற்றுக்கொண்டு.., 1980-களில் பக்தி ஆல்பங்கள் செய்ய ஆரம்பித்தார். அது பெரிய ஹிட் ஆக.., கிட்டத்தட்ட 450 ஆல்பங்கள் செய்து சாதனை படைத்தார்.., அதற்காக பெரிய பாடகர்கள் அனைவரையும் பாட வைத்தார்… அப்போதுதான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து, நமது தேவாவை பட வாய்ப்புக்கு தகுதியானவன் என்று கூறினார்..,

1989-இல் ராமராஜன் நடித்த மனசுக்கேத்த மகராசாதான் இவருக்கு முதல் படமாக அமைந்தது.., இது ஒரு பெரிய வெற்றியாக இல்லை, ஆனால் அது அவரை திரை இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது.., அதன் பிறகு 1990-இல் வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் இவர் கதவுகளை தட்டித் திறந்தது. 1991 வாக்கில் பிரபு போன்ற பெரிய நட்சத்திரங்கள் படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. இளையராஜாவிற்கும் கே.பாலச்சந்தர் அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கவிதாலயா புரொடக்ஷன்ஸ் படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் படத்திற்கு இசை அமைக்க தேவாவிற்கு வாய்ப்பு கிடைத்தது..,

ரஜினிகாந்த், கமல்ஹாசன் தவிர, 1990களில் அஜித், விஜய், பிரஷாந்த் உள்ளிட்ட இளைய தலைமுறையினரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவர் இசை அமைத்தார். இப்படி தேனிசைத் தென்றல் தேவா கிட்டத்தட்ட 45 வருடங்களாக தமிழ் இசையுலகில் தனக்கே உரிய பாணியோடு அசைக்க முடியாத தவிர்க்க முடியாத இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.., தேன் போன்ற இசையை இதமாய் தென்றாலாய் நம் காதுகளுக்கு வழங்கி வரும் இசைத்தாயின் செல்ல குழந்தை தேனிசைத் தென்றல் தென்னாட்டு தேவா இன்னும் பல ஆண்டுகள் தமிழ் இசையுலகில் ஆதிக்கம் செலுத்துவார்.

Article By Sethumadhavan