Specials Stories

உலகின் மிகச்சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ‘சார்லஸ் டார்வின்’

இரண்டு ஆண்டு திட்டமிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நீடித்த ஒரு கடல் பயணத்தின் முடிவில் எழுதப்பட்ட ஒரு புத்தகம், அதுவரை உலகில் நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக; மாற்றாக அமைந்தது. அந்த புத்தகம் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் விவாதத்திற்குரியதாக இருக்கிறது என்பதுதான் சுவாரசியம்.

அப்படி அந்த புத்தகத்தில் என்னதான் இருந்தது? அதை எழுதியது யார்? அந்த கடல் பயணத்தின் முடிவில் என்ன தான் சொல்ல வந்தார்கள்? ஏன் இன்னும் அது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது? என்ற பல கேள்விகளுக்கு நாம் 193 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1831 டிசம்பர் 27 ஒரு கடுமையான குளிர் நாளில் தான் அந்த கப்பல் லண்டனிலிருந்து அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி பயணித்தது. அதில் பலர் பயணித்தாலும் அந்த பயணத்தில் இரண்டு பேர் மிக முக்கியமான நபர்களாக இருந்தார்கள். ஒன்று “ராபர்ட் பீட்ஸ் ரே”, இன்னொருவர் அவரது நண்பராக பயணித்த 22 வயது இளைஞன்.

அந்த சின்னஞ்சிறு இளைஞன் தான் நம்முடைய கதையின் நாயகன்.” HMS BEAGLE” என்ற அந்தக் கப்பல் தென் அமெரிக்காவின் கரையோரங்களில் பல இடங்களில் பயணித்தாலும் அது கடைசியில் போய் நின்றது வரலாற்றை மாற்றி வைத்த ஒர் இடத்தில். ஆம் அங்குதான் உலகத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியது என்று சொல்லலாம்.

அந்த தீவில் தான் புதிய வகையான தாவரங்கள், விலங்குகள் பறவைகள் என விதவிதமான, வித்தியாசமான உயிரினங்கள் நிறைய இருந்தன. அதைக் கண்டு மெய் சிலிர்த்துப் போன அந்த 22 வயது இளைஞன் தனது ஆராய்ச்சியை மேலும் விரிவு படுத்தினார்.

கடல் புயல்களையும் எதிர்பாராத நெருக்கடிகளையும் சந்தித்தாலும் தான் நினைத்ததற்கு அதிகமாக தன் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருந்ததாக அந்த பயணத்தை அந்த இளைஞன் நம்பினான். ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் 1836 இல் லண்டன் வந்த அந்த இளைஞன் தனது பயண அனுபவத்தையும் தான் செய்த ஆராய்ச்சியையும் வைத்து “THE VOYAGE OF THE BEAGLE” என்ற தனது ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்.

அப்படி தனது கண்டுபிடிப்புகளை சொன்ன அந்த 22 வயது இளைஞனின் பெயர் “சார்லஸ் டார்வின்.” உலக உயிரினங்களின் தோற்றத்தை புதிய கண்ணோட்டத்துடன் கடினமான ஆராய்ச்சியுடன் திடமான நம்பிக்கையுடன் வெளியிட்ட சார்லஸ் டார்வின் 1858 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் தனது இன்னொரு நண்பர் பாலசுடன் இணைந்து “லண்டன் லினன் கழகத்தில்” தனது கட்டுரையை வெளியிட்டார்.

அதுதான் 1959 இல் வெளியான சார்லஸ் டார்வின் உடைய மிகப் புகழ் பெற்ற புத்தகமான “THE ORIGIN OF SPECIES BY NATURAL SELECTION” தமிழில் “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” என்ற அந்த புத்தகத்தில் தகுதியும் வலிமையும் உள்ள உயிரினங்களே நிலைத்திருக்கும், மற்றவை அழிந்து போகும்.

இது புதிய இனங்கள் உருவாவதற்கு வழி ஏற்படுத்தும் என்று சொன்னார். மக்களும் விஞ்ஞானிகளும் இதை வியப்புடன் ஏற்றுக் கொண்டாலும் வழக்கம் போல மதங்களும் தேவாலயங்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. அதுவரை நம்பப்பட்டு வந்த கட்டுக்கதைகளும், பொய் புரட்டுகளும் மத சாயம் பூசிக் கொண்ட நம்பிக்கைகளும் செல்வாக்கு இழந்து டார்வின் உடைய ஆராய்ச்சி மக்களிடம் விழிப்புணர்வையும் புதிய கண்ணோட்டத்தையும் உருவாக்கி மக்களை சிந்திக்க வைத்தது.

இப்படி உலகத்தின் மிகச்சிறந்த அறிஞர்களில் மிக மிக முக்கியமானவராக கருதப்படுகின்ற சார்லஸ் டார்வினின் பிறந்த தினமான பிப்ரவரி 12ஆம் தேதி, நூறு ஆண்டுகள் கழித்து 1909 ஆம் ஆண்டு 167 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கேம்பிரிட்ஜ் நகரில் ஒன்று கூடி சார்லஸ் உடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று இன்னும் பரவ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்த விஞ்ஞானிகள் டார்வினுக்கு மிகப்பெரிய சிறப்பு செய்தார்கள்.

அதேசமயம் அவருடைய பரிணாமக் கொள்கை கோட்பாடு வெளியாகி ஐம்பதாவது ஆண்டை கொண்டாடுகின்ற வகையில் நியூயார்க் அகாடமி ஆப் சயின்ஸ், அமெரிக்காவுடைய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் டார்வினை போற்றி புகழ்ந்தது. அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நியூசிலாந்திலும் டார்வினுக்கும் அவரது கொள்கைக்கும் புகழ் சேர்க்கப்பட்டது.

அடுத்த 100 ஆண்டுகள் கழித்து 2009 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் டார்வினின் 200 வது பிறந்த நாளை கொண்டாடியது. லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிணாமக் கொள்கை வெளியான 150 வது ஆண்டை கொண்டாடியது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 12ஆம் தேதி டார்வின் பிறந்தநாளில் உலகம் முழுக்க அவருக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் இந்த தினத்தை “டார்வின் தினமாக” உலகம் கொண்டாடுகிறது.

அந்த வகையில் உலகத்தின் மிகச்சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளராக இன்று வரை திகழ்கின்ற டார்வினின் பிறந்த நாளில் சூரியன் FM தனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறது.

Article By RJ K.S. NADHAN