Specials Stories

பாரம்பரியம் காக்கும் நாட்டு மாடுகள்

கம்பீரம், வீரம், உழைப்பு மற்றும் வேகத்திற்கு அடையாளமாக விளங்குவது இந்த நாட்டு மாடுகள் என்னும் இந்திய நாட்டில் தோன்றிய மாட்டின வகையாகும்.

முதுகில் திமிரும் திமிலும், கழுத்தில் தொங்கிய தசை போன்ற அலைதாடியுடன் காணப்படும் நாடு மாடுகள் இந்திய மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்க்காடுகின்றன.. பால் தேவைக்காகவும், விவசாய தேவைக்காகவும், வண்டி இழுப்பதற்கும் நாட்டு மாடுகள் வெகுவாக பயன்படுத்துகின்றன.

இவற்றின் சாணம் எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமாடுகளானது இந்திய காட்டெருதுவில் இருந்து தோன்றியதாகவும் சிலசமயம் அதன் துணையினமாகவும் கருதப்படுகிறது

மட்பாண்டங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகளின்படி ஏறக்குறைய கி.மு. 2000 காலகட்டத்தில் இந்த இனமானது எகிப்தில் இருந்தது என்றும், அது கிழக்கு அல்லது தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இவை சகாரா கீழமை ஆபிரிக்காவில் 700 மற்றும் 1500க்கு இடைப்பட்ட காலத்தில் முதலில் இருந்ததாக கூறப்படுகிறது

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. இன்று தமிழகம் மற்றும் இந்தியா முழுக்கவே நூற்று கணக்கில் தான் நாட்டு மாடுகளை வளர்க்கப்படுகிறது. நாட்டு மாடுகளிடம் இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்.

நாடு மாடுகளின் வகைகள் சுமார் 75 வகைகளுக்கு மேல் இருந்ததாக வரலாற்று ஏடுகள் கூறுகிறது. அவற்றுள் சில வகைகளை பார்ப்போம்.

கிர் :
கிர் வகை பசுவிற்கு தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பல பெயர்கள் உள்ளன.

குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது. இன்று குஜராத் மற்றும் பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் இருக்கும் இந்த கிர் வகை மாடுகளின் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

Kir

கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும் இந்த கிர் வகை மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும். முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும் என கூறப்படுகிறது!

சிவப்பு சிந்தி :
இந்த வகை மாடுகள் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி எனவும் அறியப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிர் சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும். இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1100-2600 கிலோ வரை இருக்கும்.

சிவப்பு சிந்தி

சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்.

சாஹிவால் :
சாஹிவால் மாட்டினம் பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தில் இருந்து தோன்றியது.
இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் பல பெயர்களில் அறியப்படுகிறது.

சாஹிவால்

இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும். இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2725 முதல் 3175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்!

காங்கிரேஜ் மாடுகள் :
இந்த வகை மாடுகள் பன்னாய், நாகர், தளபதா, வாட்தாத், வடியார், வாட்தியார், வாடியல் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இம்மாடுகள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடனும் காணப்படுகின்றன.

காங்கிரேஜ்

இவை வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.இவை வெப்ப மண்டல மாடுகளின் இயல்பான தோற்றத்தில் தோளில் திமிலுடன் இருக்கும். இந்த விலங்கு வெப்பத்தை தாங்கக்கூடியதாகவும் பூச்சி எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன.

இவை மட்டுமில்லாமல் காங்கேயம் ,புலிக்குளம், உம்பலாச்சேரி, ஹலிக்கார், அம்ரிட்மஹால், கிலாரி, ஹரியானா, ஓங்கோல், புங்கனூர், சிந்தி, தார்பார்க்கர், வெச்சூர் என்ற பல வகை மாடுகள் உள்ளன!

இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பாக விளங்குகின்றன. அவற்றின் பாதுகாப்பு நாட்டிற்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் பாதுகாப்பு…

நாட்டு மாடுகள் ஐந்தறிவு ஜீவன்கள் மட்டுமல்ல. பாரம்பரியத்திற்கு கலாச்சாரத்திற்கும் நாகரித்திற்கும் அடையாளம்.