Specials Stories

‘ஜல்லிக்கட்டு’ தமிழரின் வீரவிளையாட்டு!

தை திருநாள் வந்தாலே பொங்கலோடு சேர்த்து ஜல்லிக்கட்டும் நினைவுக்கு வரும். இது ஒரு விளையாட்டாக அல்லாமல் ஒரு திருவிழாகவே கொண்டாடப்படுகிறது.

பண்டைய தமிழர்களின் வாழ்வியலில் மாடுகள் மிகவும் முக்கியமான இடம் பிடித்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்த குறிப்புகள் பல சங்கஇலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. ஐந்திணைகளில் ஒன்றான முல்லை நிலத்தில் தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கும் என்பதற்கு சங்க பாடல்கள் சான்றாக அமைந்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்களின் திருமணத்தோடு தொடர்புடையதாகவும் இருந்துள்ளது.

ஜல்லிக்கட்டு எனும் பெயராக்கம் எப்படி வந்தது என்றால் பண்டைய காலத்தில் மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசாக சல்லி காசை மாட்டின் கொம்பில் கெட்டி விடுவார்கள். இந்த சல்லி கட்டு என்பது காலப்போக்கில் மருவி ஜல்லிக்கட்டு என்று மாறியுள்ளது. பண்டைய த்தமிழர்களால் ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு விஜயநகர நாயக்க மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்யும்போது தான் ஜல்லிக்கட்டு என்ற பெயர் தோன்றியது.

ஜல்லிக்கட்டில் தொன்மையை நிரூபிக்கும் வகையில் பல அறிவியல் ஆராய்ச்சிகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவையாக இருப்பது ஒரு நபர் ஒரு காளையின் கொம்பை பிடிப்பது போன்ற முத்திரை பதிந்த குறிப்பாகும்.

ஏறுதழுவுதல், கொல்லேறுதழுவுதல், ஏறுகோல், மாடுபிடித்தல், பொல்லெருது பிடித்தல், மஞ்சுவிரட்டு என்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல பெயர்களில் இந்த விளையாட்டை அழைப்பர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு தான் உலக புகழ்பெற்றதாக திகழ்கின்றது.

அலங்காநல்லூர், பாலமேடு, பெரியசூரியூர், அலங்காநத்தம், தம்மம்பட்டி, நார்த்தாமலை, ஆதமங்கலம், புதூர், தேனிமலை, தேனி என தமிழகத்தின் பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு மிகவும் விமர்சியாக நடைபெற்று வருகின்றது. ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு குறித்து பழந்தமிழ் நூலாக விளங்கும் கலித்தொகையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதை தவிர்த்து மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் ஜல்லிக்கட்டு குறித்து பல பாடல்கள் உள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் ஒப்பிடுகையில் கலித்தொகையில் தான் ஜல்லிக்கட்டு குறித்து அதிக அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலித்தொகையில் மற்றொரு பாடலில் கூடி கொல்லுகின்ற காளையின் கொம்பினை கண்டு அஞ்சுகின்ற ஆண்மகனை ஆயர்மகள் மறுபிறவியில் கூட தழுவ மாட்டாள் என்று கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் வேளையில் குரவைக்கூத்து நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டுக்கு முதல் நாள் பெண்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் வெற்றி பெற வேண்டி பாடுவார்கள். ஜல்லிக்கட்டு நடந்த நாள் மாலையில் வெற்றிபெற்ற வீரனை பறைசாற்றி குரவைக்கூத்து பாடுவர்.

பண்டைய தமிழர்களிடையே இருந்த இன்னொரு மரபு என்னவென்றால் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் அதோடு ஒரு காளைக்கன்றையும் எடுத்து வளப்பர். அந்த பெண்குழந்தை பருவமடைந்ததும், வளர்ந்துவந்த காளையை அடக்கி வெற்றிபெறும் ஆண்மகனுக்கு தனது மகளை மனம் முடித்து வைப்பர்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நிலப்பரப்புகள் மேய்ச்சல் நிலமாக இருந்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு இந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் குறியீடாக திகழ்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு வீரனை அடையாளப்படுத்தும் விழாவாகவே கருதப்படுகிறது என்றால் அது மிகையாகாது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க வீரவிளையாட்டாகிய ஜல்லிக்கட்டை பேணி காக்க வேண்டியது தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்.

Article By Abishek.N.K