Specials Stories

இசை வானில் பறக்கும் சின்னகுயில் – Chitra !!!

மொழியின் தடைகள் உடைக்கும் இசையின் இதம் சுகிக்கும் சின்னக்குயில். அன்றும் இன்றும் என்றும் கொஞ்சி கொஞ்சி பாடும் கானக்குயில். குழந்தை பாவத்தில், காதல் மோனத்தில், உற்சாக வேகத்தில், இசை பயணம் செய்யும் இசைக்குயில்.

1985 ஆம் ஆண்டு பாடறியேன், படிப்பறியேன்னு இந்த சின்னக்குயில் தமிழில் பாடி 33-வது தேசியத் திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த பின்னணி பாடகின்னு இடம் பிடிச்சதுல தொடங்கி, 2004 ஆம் ஆண்டு 52-வது தேசியத் திரைப்பட விருதுகள்ல ஒவ்வொரு பூக்களுமே நம்ம உத்வேகத்துக்கான உதாரணம்ன்னு தன்னோட ஆறாவது தேசிய விருதை வாங்கினது வரை மட்டுமில்ல, தமிழ், மளையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா மொழின்னு பெரும்பாலான இந்திய மொழிகளிலும், மலாய், லத்தீன், அரபிக், சிங்களா, ஆங்கிலம், பிரெஞ்சு மொழின்னு உலக மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேல பாடல்கள் பாடி தன்னோட 40 ஆண்டுகால இசை பயணத்துல இன்னும் இசை ரசிகர்களின் இதயங்களில் இன்னிசை சிந்தி சிரிக்கிறார் பின்னணி பாடகி கே. எஸ். சித்ரா.

தமிழ்நாட்டுல தாங்க இவங்க பெயர் சின்னகுயில், கேரளாவுல வானம்பாடி, ஆந்திராவுல சங்கீத சரஸ்வதி, கர்நாடகாவுல கான கோகிலா, வட இந்தியாவுல பியா பசந்தின்னு ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு செல்ல பெயரோட இசை சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காங்க நம்ம சின்னகுயில் சித்ரா. செல்லபெயர்கள் என்னமோ வேற வேற இருந்தாலும், இவங்க குரலின் இனிமை ஒன்னுதான், மாற்றமில்லா நிரந்தரம் தான்.

திரைபடங்களுக்கு பாடுறதுக்கு முன்னாடியே தெய்வீக குரல் கொண்ட பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் அவர்கள் கூட சேர்ந்து இந்தியா, வெளிநாடுகள்-னு மேடைகளில் பாடியவர் இவர். திரைப்படங்கள்-ல பாட தொடங்கியது முதல் கேரள மாநில திரைப்பட விருதுகள் 16 முறையும், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் 4 முறையும், ஆந்திர மாநில திரைப்பட விருதுகள் 11 முறையும் வாங்கி இருக்கிறார். இதுக்கு எல்லாம் மேல 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்பட்டார். இங்கிலாந்து பாராளுமன்றத்துல அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய பெண் இவங்க தான்.

சில பாடல்கள் நம்ம மனச திருடும், சில குரல்கள் பாடல்களையே திருடும், அப்படி பட்ட ஒரு குரல் தாங்க சின்னக்குயில் சித்ரா அவர்களோடது. இசையமைப்பாளர்களோட இசைக்கு இன்னும் அதீத உணர்வ காதலோட கொடுக்குறது இவங்களுக்கு கைவந்த கலை. அந்த பாட்டோட வரிகள் நமக்கு காதல உணர்த்துதா, இல்ல இசை கருவிகளோட சப்தம் காதலுக்குள்ள நம்ம மனச இழுக்குதான்னு யோசிக்கும் போது, இவங்களோட மென்குரல் இன்னும் ஒரு அழுத்தம் கொடுக்கும், அர்த்தம் புரிய வைக்கும்.

1980கள்ல திரைப்படங்கள்ல துள்ளி நடித்த நதியாவுல தொடங்கி, 1990கள்ல காதல் ஏக்கத்துல வாய் பேசாம நின்ற மனிஷா கொய்ராலாவா, 2015ல ஹோ காதல் கண்மணின்னு டிஜிட்டல் காதல் செய்த நித்யா மேனன் வரைக்கும் தமிழ் திரையில குறும்பு, காதல், தெய்வீகம்ன்னு எல்லாவிதமான பாடல்களையும் ஹீரோயின்ஸ்க்கு செட் ஆகுற மாதிரி பாடி, இளையராஜா, ஹம்சலேகா, மரகதமணி, எஸ். ஏ. ராஜ்குமார், ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், தேவா, யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், டி இமான், ஜிப்ரான் இப்படி பல இசையமைப்பாளர்கள் இசையிலும் வானம்பாடியாய் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ரா அவர்களின் பிறந்தநாள்ல அவங்க பாடல்களைக் கேட்டு மனமுருகி போவோம்.

Article by Anand