Specials Stories

கொல்லிமலையில் மனிதர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்து வாழும் சித்தர்கள்!

கொல்லிமலை என்று சொன்னாலே நம்மையும் அறியாமல் ஒரு அச்சம் உள்ளூறத் தொற்றிக் கொள்வது இயல்புதான். இயற்கை ஒரு பக்கமும் பில்லி, சூனியம், சித்தர்கள், அமானுஷ்யம் என்று மற்றொரு பக்கமுமாக இந்த பிரம்மாண்டத்தின் வரலாறு இன்றைக்கு நேற்றைக்கு வந்தது அல்ல. ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதற்கொண்டு இந்த மலையில் ஒரே முறையிலான வாழ்க்கைதான் தொடர்கிறது என்பதே ஆச்சர்யமாக உள்ளது.

வருடம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற தோற்றம், ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்து 180 அடியில் இருந்து விழும் ஆகாய கங்கை, மலைப் பாம்பு நீட்டி நெளிந்து படுத்து இருப்பது போல 78 கொண்டை ஊசி வளைவுகள், கடல் மட்டத்தில் இருந்து 1,300 அடி உயரம் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு என பிரம்மாண்டமான தோற்றம், ஆள் நடமாட்டம் இல்லாத அமைதி, கரடிகளும் பாம்புகளும் அதிகமாக உலாவித் திரியும் இயற்கை என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

“கொல்லிப் பாவை பாதுகாக்கிற இந்த கொல்லி மலை பரந்து விரிந்து இருப்பது போல உனது அழகு இருக்கிறது” என காதலன் காதலியிடம் கூறுவதாக ஒரு காட்சி நற்றிணை(192) பாடலில் இடம் பெறும். மேலும், அழியாத கொல்லிப் பாவை(நற்றிணை. 201) பாடலிலும் இப்படி அழகுக்கும் அச்சத்துக்கும் சங்க இலக்கியம் முதற்கொண்டு பல இலக்கியங்களில் கொல்லி மலையைப் பற்றியும் அதைக் காக்கின்ற கொல்லி பாவையைப் பற்றியும் செய்திகள் குவிந்து கிடக்கின்றன.

”கொல்லிப் பாவை, யாரையாவது நேரில் பார்த்தால், தன் கண்களாலேயே அச்சுறுத்தி கொன்று விடுவாளாம்” இதை கேட்கும் போது வேடிக்கையாகக் கூட தோன்றலாம். உண்மையில் இப்படித்தான் நமது பண்டைய தமிழர்களும் நினைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு தன்னை விட அதீத சக்தி இருப்பதாக நினைத்த பண்டைய தமிழர்கள் ஒவ்வொரு இயற்கை சக்திக்கும் ஒரு வித ஆற்றல் இருப்பதாக எண்ணியிருக்கின்றனர். மலைக்கு பக்கத்தில் போனால் அணங்கு (ஒரு பெண் தெய்வம்) வந்து அச்சுறுத்தி பயத்தை ஏற்படுத்தி விடும். அதே போல அடர்ந்த காடு, குளம் போன்ற இடங்களில் எல்லாம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சக்தி இருப்பதாகவும் நினைத்திருக்கின்றனர்.

கொல்லி மலையில் மாசி பெரியசாமி கோவில் என்ற இன்னொரு பயங்கரமான சக்தியும் வழிபடப்படுகிறது. ஊர்ப்புறங்களில் காணப்படுகின்ற முனீஸ்வரனை ஒத்ததுதான் என்றாலும் வழிபாட்டு முறைகள் மிகவும் பயங்கரமாகவே இருக்கிறது. இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டு சிலர் உயிருடன் கோழிகளை வேலில் குத்தி வைக்கின்றனர். கோழிகள் எப்படி துடி துடித்து சாகிறதோ அப்படி தங்களுக்கு தீங்கிழைத்தவர்கள் துடித்து சாக வேண்டும் என்ற நம்பிக்கையில் இத்தகைய வேண்டுதல்கள் நடத்தப்படுகின்றன.

உண்மையில் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்ற எந்த ஒரு சக்தியும் மத அடிப்படையிலானது அல்ல. இயற்கையைப் பார்த்து பயந்த மனிதனின் பதிவுகளாகத் தான் அவை இடம் பெற்றிருக்கின்றன. 2 ஆயிரம் காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியத்தில் காணப்பட்ட அதே கொல்லித் தெய்வம் இன்றைக்கும் கொல்லி மலையை காப்பாற்றுவதாக மக்கள் நம்புகின்றனர். அதோடு அப்பகுதியில் கோரக்கர் என்ற சித்தர் வல்வில் ஓரி மன்னன் காலத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த மலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. கோரக்கர் மட்டுமல்லாது கொல்லி மலையில் பல்வேறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் இன்றைக்கும் அந்தப் பகுதியில் நடமாடுவதாகவும் நம்பப்படுகிறது.

இத்தோடு நம்மை மேலும் சிந்திக்க வைக்கும் மற்றொரு செய்தியும் இங்கு உள்ளது. அதாவது இங்கு இருக்கும் சித்தர்களுக்கு கூடு விட்டு கூடு பாயும் கலை தெரியுமாம். இந்த கலை தெரிந்த சித்தர்கள் இன்றும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் இங்கு இருக்கும் ஓர் அபூர்வ மூலிகையை உட்கொண்டால் மனிதர்கள் மாயமாக மறைந்துவிடுவார்களாம். அதை உண்டுதான் சித்தர்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றனராம்.

மேலும் இங்கு சுடர்விட்டு எரியக்கூடிய ஜோதிப் புல் எனும் செடி ஒன்று உண்டு. அதை பயன்படுத்தி தான் சித்தர்கள், குள்ளர்கள் தங்களது குகைகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சித்தர்கள் வாழ்ந்த, வாழும் குகைகளை இன்றும் இங்கு பார்க்கலாம். ஆனால் அதற்குள் போகவேண்டாம் என எச்சரிக்கின்றனர் இந்த பகுதி மக்கள். இப்படி பல சுவாரஸ்ய மற்றும் அமானுஷ்ய விஷயங்கள் கொல்லி மலையை பற்றி பலராலும் கூறப்படுகிறது. உங்களுக்கு தெரிந்து இது போன்ற விஷயங்கள் எதாவது இருந்தால் கமெண்டில் குறிப்பிடுங்கள்.

Article By Smily Vijay