Cinema News Specials Stories

அனைவரது மனதிலும் இடம்பிடித்த ‘அல்லி’ லஷ்மி மேனன்

Lakshmi-Menon

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் மலையாள நடிகைகளுக்கான வரவேற்பு கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிகம் கிடைக்கும் என்பது ஒரு எழுதப்படாத விதி.

அப்படியாக 2011-ல் முதலில் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகியிருந்தாலும், அதே வருடம் தமிழ் சினிமாவில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார் லஷ்மி மேனன். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் சசிகுமாரின் படங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயம் அது. சசிகுமார் இயக்கத்திலும், சசிகுமார் நடிப்பிலும் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் S.R.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படமும் ஹிட். விஜய் சேதுபதியின் ஆரம்ப காலம் அது. இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி கதாநாயகியாக தனது நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் லஷ்மி மேனன். அச்சு அசலான தென் தமிழக கிராமத்து பெண் தோற்றத்தில் தமிழ் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் வந்து’ , ‘இறக்கை முளைத்தேன்’ , ‘நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள’ உள்ளிட்ட பாடல்கள் அனைவரது மொபைலிலும் அடிக்கடி Play செய்யப்படும் பாடல்கள் ஆனது. அனைத்து பாடல்களிலும் லஷ்மி மேனன் காதலிக்கும் கல்லூரி பெண்ணாக கவனிக்க வைத்திருப்பார்.

தமிழில் 2வது படமும் லஷ்மி மேனனுக்கு மிகப்பெரிய ஒரு படமாக அமைந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் அறிமுகப் படமான கும்கி படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அதிரி புதிரி ஹிட். இமான் இசையில் உருவான இந்த பட பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை என்று கூறலாம். இப்படியாக இந்த படத்தின் ‘அல்லி’ கதாபாத்திரம் மூலம் தென்னிந்திய சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் லஷ்மி மேனன்.

தொடர்ந்து வருடத்திற்கு 4, 5 படங்கள் நடித்துக் கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் லஷ்மி மேனன். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இறுதியாக 2016 ஆம் ஆண்டு மிருதன் மற்றும் ரெக்க படங்கள் இவரது நடிப்பில் வெளியாகின. அதன் பின் சமூகவலைதளங்களில் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தார். 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2021-ல் புலிக்குத்தி பாண்டி திரைப்படமும், 2022-ல் AGP Schizophrenia திரைப்படமும் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.

விரைவில் ஒரு ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி கதாநாயகியாக லஷ்மி மேனன் வலம் வர வேண்டும் என இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo

About the author

MaNo