Cinema News Specials Stories

The Real Hero ‘நவாசுதீன் சித்திக்’

Nawazzudin-Siddiq

பாலிவுட் சினிமாவில் நுழைய வேண்டுமென்றாலே அழகாக இருக்க வேண்டும், கலராக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வேண்டும், உடல் Fit ஆக இருக்க வேண்டும், இப்படி பல காரணிகள் உண்டு. இவையனைத்தும் பாலிவுட்டில் நுழைய ஆசைப்படும் ஆண்களுக்கு தேவையான அம்சங்கள். ஆனால் இந்த எழுதப்படாத விதிகளையெல்லாம் தவிடு பொடியாக்கி பாலிவுட்டில் நுழைந்து தனக்கென தனி இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் தனது நடிப்பால் உருவாக்கி வைத்திருப்பவர் தான் நவாசுதீன் சித்திக்.

நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக முறையாக நடிப்பை கற்றுக் கொண்டு பாலிவுட்டில் வாய்ப்பு தேடி அலைந்து ஒரு வழியாக 1999 ஆம் ஆண்டு அமீர்கான் நடித்த Sarfarosh படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார் நவாசுதீன். தொடர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் நடித்த படங்களில் இவரது காட்சிகள் ஒரு நிமிடம் கூட முழுமையாக இடம்பெறாது. ஆனாலும் தொடர்ச்சியாக முயற்சியை கைவிடாமல் ஆர்வம் குன்றாமல் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி அலைந்தார்.

Image

2010-ல் வெளியான ‘Peepli Live’ இந்தி திரைப்படத்தில் பத்திரிகையாளராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறியப்பட்டார். தொடர்ந்து 2012-ல் வெளியான ‘Patang: The Kite’ இந்தி திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இத்திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றதோடு, நவாசுதீன் சித்திக் நடிப்பிற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.

அதுவரை பாலிவுட் கமர்ஷியல் இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டு வந்தார் நவாசுதீன். ஆரம்பத்தில் சொன்னது போல தோற்றம், நிறம், உயரம் என பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். உங்கள் தோற்றம் நடிகருக்கான தோற்றமாக இல்லை என வெளிப்படையாக கூறி நவாசுதீனை நிராகரித்தனர். இதனை பின் நாட்களில் நவாசுதீனே வெளிப்படையாக கூறியுள்ளார்.

‘Patang: The Kite’ படத்திற்கு பின் ‘Kahaani’ திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ‘Gangs of Wasseypur’ படத்தில் நடித்து அனைவராலும் கொண்டாடப்பட்டார். அடுத்ததாக 2013-ல் ‘The Lunchbox’ படத்தில் நடித்து பெரிதளவில் பேசப்பட்டார். அதற்காக விருதுகளும் பெற்றார். இதுவரை அவர் பெற்ற விருதுகள் ஏராளம். ஒரு நடிகராக அவர் அடைந்துள்ள வளர்ச்சி அபாரமானது. இந்தியா முழுக்க சிறந்த ஒரு நடிகராக பேசப்பட்டு வருகிறார் நவாசுதீன்.

Image

நவாசுதீன் நடிக்கும் படங்களை அவருக்காக மட்டுமே பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் உண்டு. மேலும் அவரது நடிப்பால் கவரப்பட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தமிழில் பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வில்லனாக நவாசுதீன் சித்திக்கை நடிக்க வைத்தார்.

கதையின் நாயகனாக இல்லாமல் கதைக்கான நாயகனாக இருப்பது தான் நவாசுதீனின் வெற்றிக்கான முக்கிய காரணம். அது எந்த கதையாக கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அதற்கான முழு உழைப்பை கொடுத்து அந்த கதாபாத்திரத்தை தனித்துவத்துடன் அழகாக வெளிப்படுத்துவதில் நடிப்பின் மீதான நவாசுதீனின் காதலை தெரிந்து கொள்ளலாம்.

நாம் ஒரு விஷயத்தை நேசிக்கும் போது, நேசிப்பதை அடைவதற்காக நாம் எந்த அளவு முயற்சிக்கிறோம் என்பதிலேயே வெற்றி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக விளங்கும் நவாசுதீன் சித்திக்கிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo

About the author

MaNo