லியாண்டர் பயஸ், இவர் ஒரு இந்திய டென்னிஸ் வீரர். 17 ஜூன் 1973-ல், பிறந்த இவர் இந்தியாவை சார்ந்த மிக சிறந்த டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருகிறார். இவருடைய சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
1990-ல், இவருக்கு “அர்ஜுனா விருது” கொடுக்கப்பட்டது, 1996-1997 ஆம் ஆண்டுக்கான “ராஜீவ் காந்தி கேல் ரத்னா” விருது கொடுக்கப்பட்டது, 2001 ஆம் ஆண்டு “பத்மஸ்ரீ” விருதையும் 2014 ஆம் ஆண்டு “பத்மபூஷன்” விருதையும் பெற்றுள்ளார். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை Career ஆக கொண்டிருக்கும் எந்த ஒரு வீரரும் பத்து வருடத்திற்கு மேலாக தாக்குபிடிப்பது இல்லை. ஆனால், இந்த பிம்பத்தை உடைத்தார் லியாண்டர் பயஸ்.
இந்தியாவின் சார்பாக பல தடவை பதக்கங்களை பல்வேறு பிரிவுகளில் வென்று குவித்துள்ளார். தன்னுடைய 42வது வயதில் 17 கிராண்ட் ஸ்லாம் பதக்கங்களை வென்றுள்ளார். இவருடைய சாதனைகளை பற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. கல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த லியாண்டர் பயஸ், தனது 12 வயது முதல் 17 வயது வரை சென்னையில் வசித்து வந்தார். சென்னையில் தான் முதல்முதலாக டென்னிஸ் பயிற்சி எடுத்துள்ளார்.
சென்னையிலுள்ள பிரித்தானியா அம்ரிட்ராஜ் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார். தனது 17-வது வயதில் “ஜூனியர் விம்பிள்டன்” டைட்டிலை வென்று, ஜூனியர் பிரிவில் நம்பர் 1 ஆக திகழ்ந்தார். பின்னர் அமெரிக்காவிற்கு சென்று தன்னுடைய டென்னிஸ் பயிற்சியை தீவிரமாக தொடங்கியுள்ளார். “டேவிஸ் கப்” என்ற போட்டியில் சுமார் 43 முறை வென்றுள்ளார்.
லியாண்டர் பயஸின் பெற்றோர்களும் விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தாயார் கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். 2020-ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வு ஆண்டாக இருக்கும் என்று அறிவித்தார் லியாண்டர் பயஸ். ஆனால் 2021- இல் “சம்மர் ஒலிம்பிக்ஸில்” மற்றும் “ரோலண்ட் கரோஸ்” ஆட்டத்தில் இவருடைய பங்கு இருக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன், யு.எஸ் ஓபன், விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ் மற்றும் பல்வேறு பிரிவுகளில் விளையாடி கலக்கி கொண்டிருக்கும் லியாண்டர் பயஸ், தனது 48 வயதிலும் விளையாட்டு பயணத்தில் சாதித்துக் கொண்டிருக்கும் இளம் வீரராகவே பார்க்கப்படுகிறார். லியாண்டர் பயஸுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by Rj Suba