Cinema News Specials Stories

தமிழ்ச் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா ‘மாமன்னன்’?!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கடந்த நில நாட்களாக சமூகவலைதளங்களில் மாமன்னன் படம் குறித்த உரையாடல்கள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது.

மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்து பேசிய விஷயங்கள் தான் இப்போது வைரல். படத்தை விட இதைப்பற்றி தான் பலரும் பேசி வருகின்றனர். அதாவது, நான் எத்தனை படம் எடுத்தாலும் அதில் சமூகநீதிக்கான அரசியல் இருக்கும். மாமன்னன் படம் வெளியான பின் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும்.

தேவர் மகன் படம் எனக்குள் மனப்பிறழ்வை உண்டாக்கியது. அன்றைய நாட்களை கடக்க முடியாமல் இருந்தேன். அதன் திரைக்கதை இன்றும் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஒரு அற்புதமான சினிமா அதே சமயம் சமூகத்தில் வேறு மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது. எது சரி எது தவறு என தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன்.

நான் பரியேறும் பெருமாள் படம் எடுப்பதற்கு முன், கர்ணன் எடுப்பதற்கு முன், மாமன்னன் எடுப்பதற்கு முன்னும் தேவர் மகன் படம் பார்த்தேன். அதை பார்த்து விட்டு தான் இந்த படங்களை எடுத்தேன். தேவர் மகன் பார்த்த நாளில் இருந்து உருவானது தான் மாமன்னன். தேவர் மகன் கதைக்குள் எனது தந்தை இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் மாமன்னன். இன்னும் சொல்லப்போனால் தேவர் மகனில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் என்றும் கூறியுள்ளார்.

இந்த சமயத்தில் மாரி செல்வராஜ் 13 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பேசு பொருளாக்கியுள்ளனர். இந்நிலையில் இதற்கு கமல்ஹாசன் என்ன சொல்வார், சொல்லியிருக்கிறார் என்ற விஷயங்களை கமல் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தேவர் மகன் திரைப்படத்தில் ஒரு சமூகம் மட்டுமே படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் இன்னொரு சமூக மக்களை காட்சிப்படுத்தவில்லை… படத்தை முழுமையாக பாருங்கள் என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். மேலும், கமல்ஹாசன் பழைய நேர்காணல் ஒன்றில் தேவர் மகன் ஏற்படுத்திய எதிர் விளைவுகளுக்கு நாங்கள் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளோம். போற்றிப் பாடடி பாடலுக்காக இளையராஜாவும், நானும், வாலி அவர்களுக்காகவும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல மாமன்னன் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே கமல்ஹாசன் படம் குறித்து, ‘இது நமக்கான அரசியல் பேசும் படம், இதை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாட வேண்டும், இப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும், இதில் இருக்கும் குரல் கேட்கப்பட வேண்டிய குரல், இந்த உரையாடல் நடக்க வேண்டிய உரையாடல்’ என்றும் கூறியுள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க இயக்குநர் மாரி செல்வராஜ் உதவியாளர்களை அடிப்பார் என உதயநிதி கூறியது ஒரு பக்கம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவ்வளவு அரசியல் பேசும் மாரி செல்வராஜ் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாரி செல்வராஜ் இறுதியாக இந்த விஷயங்களை கூறியுள்ளார். நான் மனதில் பேச வேண்டும் என வைத்திருந்த விஷயத்தை கமல் சார் கண்களை பார்த்து பேசி விட்டேன். அவர் என்னுடைய படத்தை பார்த்தார். நான் என்ன நினைத்தேனோ அதையே அவர் என்னிடம் கூறினார். என் கைகளை பற்றிக் கொண்டார்.

அந்த சமயம் என் உடலில் நடுக்கம் இருந்தது. அதை அவர் உணர்ந்து கொண்டார். சிறு வயதில் தந்தையை வெறுத்த மகன் ஒரு கட்டத்தில் தந்தையை பற்றி புரிந்து கொண்டது போல இருந்தது அந்த நொடி . இந்த உறவை நான் இழக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இதுவே நமக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரும் அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட கதாபாத்திரம், உதயநிதியின் மாறுபட்ட நடிப்பு, வில்லனாக பஹத் பாசலின் தோற்றம், பாடல்கள், படத்தின் காட்சியமைப்பு என அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. வழக்கம் போல மாரி செல்வராஜின் இந்த படமும் தமிழ் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை உருவாக்கும். கமல்ஹாசன் கூறிய படி இந்த படம் வெற்றி பெறட்டும். நிகழும் நிஜங்களை பற்றிய நிகழ வேண்டிய உரையாடல்கள் தமிழ் சமூகத்தில் நிகழட்டும்.

Article By MaNo