பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய டைட்டானிக் சொகுசு கப்பலை பார்வையிட டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வரர்கள் பயணம் செய்தனர். நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அனைத்து தொடர்புகளையும் இழந்து விபத்துக்குள்ளானது.
வாஷிங்டனை சேர்ந்த ‘ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்’ என்ற நிறுவனம் 22 அடி நீளம் கொண்ட சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ளது. 5 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் உள்ள இந்த கப்பல் டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆனது. இதில் 96 மணி நேரத்திற்கு 5 நபர்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் நிரப்ப முடியும்.
டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை பார்த்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி உள்ளது. இந்த நீர்முழ்கி கப்பல் ரிமோட் மூலம் இயங்கக் கூடியவை. மேற்பரப்பில் இருந்த கப்பலில் இதனுடைய ரிமோட் கண்ட்ரோல் இருந்தது. இந்த ரிமோட் ஆனது சாதரணமாக வீடியோகேம் விளையாடுவதற்காக பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக் போன்ற கண்ட்ரோலரை வைத்தே இயக்கக்கூடிய வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனுடைய கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை பார்த்து இதனுடைய உரிமத்தை 5 முறை நிராகரித்தும் இதை இயக்கியது ஆச்சர்யமூட்டுகிறது. கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைமட்டத்தில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கிக்கப்பல் அட்லாண்டிக் கடலில் மாயமானது. மேற்பரப்பிலிருந்த கப்பலுக்கும் அந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலுக்குமான தொடர்பு துண்டிப்புக்கு உள்ளாகி கண்காணிப்பிலிருந்து விலகி சென்றுவிட்டது அந்த நீர்மூழ்கி கப்பல். அதன் பிறகு என்ன ஆனது என அமெரிக்க கடற்படை தீவிரமாக தேடி வந்தது. உள்ளே கடலுக்கு அடியே திடீரென அழுத்தம் கூடி ஷாக் வேவ் போல வந்து இருக்கலாம்.
இதனால் நீர் மூழ்கியின் பேட்டரி, அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பிரஷர் கண்ட்ரோலர், சிக்னல் சாதனங்கள் முதலில் உடைந்து இருக்கலாம். இதனால் உள்ளே அழுத்த மாறுபாடு ஏற்பட்டு அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று கப்பற் படை அதிகாரிகள் கூறினார்கள். ஞாயிற்றுக்கிழமை அந்தக் கப்பல் காணாமல் போன சிறிது நேரத்தில், நீர்மூழ்கி கப்பல்களை ரகசியமாக கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கருவியில் வெடித்து சிதறிய சத்தத்தை அது பதிவு செய்துள்ளது என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க கடற்படை அதிகாரியும் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று அமெரிக்க கடலோர காவல் படை, டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கிடக்கும் இடத்திற்கு அருகில் 12,400 அடி ஆழத்தில் ஒரு சிதைவை பார்த்ததாக தெரிவித்தது. மாயமான இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டிஷ் பணக்காரர்களில் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கி கப்பல் பைலட் பால்-ஹென்றி நர்கோலெட் மற்றும் ஓஷன் கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டான் ரஷ், பாகிஸ்தான் தொழில் அதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகிய 5 பேர் கொண்ட குழு பயணம் செய்திருந்தனர்
டைட்டானிக் பட இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் அந்த படத்தை உருவாக்குவதற்கு முன்பாக 33 முறை பல பாதுகாப்பு கருவிகளுடன் டைவ் செய்து டைட்டானிக் கப்பலை பார்த்திருக்கிறார். அங்கு ஆச்சர்யமூட்டும் விதமாக ஒன்றுமே கிடையாது, அங்கு செல்லும்போது ஏதோ இருட்டு அறையில் சிறிய விளக்கு வெளிச்சத்தில் இருப்பது போல் தான் இருக்கும், அங்கு சாதரண நீரின் அழுத்தத்தை விட நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும் அவ்வளவுதான் என்றும் கூறியிருக்கிறார்.