காலம் அடிக்கடி அற்புதமான கவிஞர்களை தமிழ் இலக்கியத்துக்கும் திரைத்துறைக்கும் தந்து தன்னைப் புதுப்பித்து கொள்ளும். அந்த வகையில் 2000 ஆண்டுக்கு பின் தமிழ் திரையிசைக்கு புத்துயிர் தந்து, இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் பாடல்களை வழங்கி காலம் கடந்த கவிஞனாக இருப்பவர் நா.முத்துக்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் தந்த கவிதை அவர். நான்கு வயதில் தாயை இழந்த அவருக்கு நாற்பது வயது வரை புத்தகங்கள் தான் உலகம். இயக்குனராக விரும்பி பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனரானார். காலம் அவரை கவி உலகில் வீரநடை போட 2000-ஆம் ஆண்டு அழைத்து வந்தது. அதன் பிறகு ஏகப்பட்ட பாடல்களை எழுதித் தள்ளினார். அத்தனையும் நம் மனதில் கல்வெட்டுகளாகப் பதிந்து கிடக்கிறது.
”காற்றில் பறவை பறந்து மறைந்த பிறகும்
இலையில் தொடங்கும் நடனம் முடிவதில்லையே “
என்ற பாடல் வரிகள் செம்மாந்த இலக்கிய ஆளுமையும், தத்துவ நலமும் உடையது.
“இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை,
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி”
இந்த வரிகளை கேட்கும் போது முத்துகுமாரை கொண்டாடாமல் இருக்க முடியாது.
”இறந்து போனதை
அறிந்த பிறகு தான்
இறக்க வேண்டும் நான் “
என்று எழுதிய முத்துக்குமார் இனி ஒருபோதும் இறக்கப் போவதில்லை, கவிதையாய் எப்போதும் நம்மோடு இருக்கத்தான் போகிறார்.
Article by RJ Stephen