Specials Stories

ASH”WIN”-500 : கிரிக்கெட் அரங்கில் மாபெரும் சாதனை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்

ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலேயான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார் என்ற நம்பிக்கையில் இந்திய அணி பந்துவீசத் தொடங்கியது. இன்னிங்ஸின் 14வது ஓவரை வீசிய அஸ்வின் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராலியை வெளியேற்றினார். இதன் மூலம், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவுக்கு (619) அடுத்து டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றார்.

37 வயதான அவர் தனது 97வது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தி, உலகில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் ஆனார். 100 டெஸ்ட் போட்டிகளுக்குள் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 100 டெஸ்ட் போட்டிகளுக்குள் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (517)க்கு பிறகு இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின் ஆவார். மேலும் ODI போட்டிகளில் 156 விக்கெட்களும் , T20 போட்டிகளில் 72 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார் அஷ்வின். இந்த சாதனையை நிகழ்த்திய அஷ்வினுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் , கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Article By Sathishkumar Manogaran