Specials Stories

’குடியரசு தினம்’ கொண்டாடப்படுவது ஏன்?

பாரத நாடு பழம் பெரும் நாடு என்ற பன்னாட்டு பெருமையை பெற்றிருந்தாலும் பன்னாட்டு கிழக்கிந்திய கம்பெனி வருகையில் ஆங்கிலேயர் வசம் சென்றது இந்தியா. பற்பல இன்னல்கள், போராட்டங்கள் கடந்து பல தலைவர்கள், பொதுமக்கள் இன்னுயிர் தந்து பெற்ற சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கிடைத்தாலும் கிடைத்த சுதந்திரம் முழுமை பெற்றது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் தான்.

நமது சொந்த நாட்டிற்கான அதிகாரப்பூர்வ அரசியலமைப்பை நிறுவுவது இந்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான முன் பணியாக இருந்தது. டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி 1946 ஆம் ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களில் அரசியலமைப்பு வரைவு எழுதி முடிக்கப்பட்டது. பொதுப்படையான திறந்த அமர்வுகளில், அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் மக்களால் மக்களுக்காக மக்களுக்கே செய்யும் மக்களாட்சி தினமாக ஜனவரி 26ஆம் நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு குடியரசு தினம் என பெயர் சூட்டப்பட்டது.
நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமரும், மாநில தலைநகரில் அம்மாநில ஆளுநரும் கொடி ஏற்றுவர்.

காவலர்களின் அணிவகுப்பும், முந்தைய வருடத்தில் சிறப்பான சேவை புரிந்த படைவீரர்களுக்கான விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்படும். ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் வேறு நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பர். இந்தியாவில் குடியரசு தினம் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.

சுதந்திரத்திற்கான நீண்ட பயணத்தையும், நாட்டை இறையாண்மையுள்ள தேசமுமாக மாற்றுவதற்கு நமது முன்னோர்கள் செய்த போராட்டங்களை நாம் நினைவில் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த நாள்அமைகிறது. அனைத்து இந்தியர்களும் சுதந்திரத்தின் சாரத்தைக் கொண்டாடி, இந்தியா தனது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் நாள் தான் இந்த குடியரசு தினம்.

குடியரசு தின கொண்டாட்டத்தில், குடிமக்கள் தங்கள் தேசபக்தியையும் பெருமையையும் வெளிப்படுத்த வேண்டும். மாணவர்கள் நல்ல குடிமக்களாக வாழ்வதாகவும், தங்கள் நாட்டை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் மாற்ற உதவுவதாக உறுதியளிக்க வேண்டும். சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து, பாரதம் செழித்து, மக்கள் வாழ்வு சிறக்க, குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

Article By RJ Priyaal