Cinema News Specials Stories

தமிழுக்கு கிடைத்த இசை பொக்கிஷம் T.M.செளந்தரராஜன்!

TMS

தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் கதாநாயகன், கதாநாயகி பாடும் போது பெரும்பாலும் பின்னணிப் பாடகர்களின் முகம் நினைவுக்கு வந்துவிடும். ஆனால் ஒரு சில பாடல்களில் மட்டுமே உண்மையில் கதாநாயகன், கதாநாயகியே பாடுவது போல் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு குரல் என்றால் 90’ஸ் கிட்ஸ் நினைவுக்கு வருவது SPB தான். எந்த ஒரு கதாநாயகருக்கும் அவரது குரல் பொருந்திப் போகும். அப்படி பொருந்திப் போவதற்காக ஒவ்வொரு கதாநாயகருக்கும் ஏற்ப மெனக்கெட்டு தனது குரலில் மாற்றம் செய்திருப்பார் SPB.

இதுவே 70, 80’களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் ஒரு குரல் அனைத்து கதாநாயகர்களுக்கும் ஏற்றாற் போல் கனகச்சிதமாக பொருந்திப் போனது என்றால் அது டி.எம்.செளந்தரராஜன் அவர்களின் குரல் தான். அந்தக்குரலுக்கு மயங்காத இசை ரசிகர்களே கிடையாது. இசை பாரம்பரியமில்லாத குடும்பத்திலிருந்து வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் குரலால் ஆட்சி செய்தார் டி.எம்.எஸ்.

ஆரம்பத்தில் மேடை கச்சேரிகளில் தியாகராஜ பாகவதர் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.எஸ். அப்போதே தனது குரல் வளத்தால் மக்களிடத்தில் கவனம் ஈர்க்கத் தொடங்கினார். எதிர்பாராத விதமாக அவரது கச்சேரியை தியாகராஜ பாகவதரே பார்க்க நேரிட்டது. தன்னுடைய பாடலை இன்னொருவர் இவ்வளவு அற்புதமாக பாடுகிறாரே என டி.எம்.செளந்தரராஜனை பார்த்து வியந்து பாராட்டும் தெரிவித்து சென்னை வந்து சாதிக்குமாறும் கூறிச் சென்றுள்ளார் தியாகராஜ பாகவதர். அந்த நொடிதான் டி.எம்.எஸ் வாழ்க்கையை கச்சேரியிலிருந்து சினிமாவை நோக்கி திசை திருப்பியிருக்க வேண்டும்.

ஒரு வழியாக கஷ்டப்பட்டு 1946-இல் சினிமாவில் பாடுவதற்கான முதல் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார் டி.எம்.எஸ். கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பையா இசையில் ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’ என்ற முதல் பாடலை பாடினார். அங்கு ஆரம்பித்த அவரது இசைப்பயணம் சில வருடங்களில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் படங்களில் பின்னணி பாடகராவதற்கான வாய்ப்பை வழங்கியது. கிடைத்த வாய்ப்பை வலுவாக பற்றிக் கொண்டார் டி.எம்.எஸ். தேர்ந்த இசை அறிவும் குரல் வளமும் பொருந்திய டி.எம்.எஸ் பாடல்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்கும் 100% பொருந்திப் போனது. அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றிப் பாடல்களாக அமைந்தது. ஒரு பக்கம் சினிமா பாடல்கள் பாடுவதோடு மறுபக்கம் பக்திப் பாடல்களையும் பாடினார். தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 11,000 பாடல்கள் பாடியுள்ளார்.

ஒவ்வொரு கதாநாயகருக்கும் கதைக்கும் ஏற்ப பாடலை எப்படி பாட வேண்டுமென ஓரிரு முறை பயிற்சி செய்து பாடல்களை பாடுவாராம் டி.எம்.எஸ். இதுவே அவரது பாடல்களுடைய வெற்றிக்கான தாரக மந்திரம். அதே போல் ஓரிரு முறை மட்டுமே பாடலை கேட்டு நடித்து விடும் சிவாஜி கணேசன், TMS பாடிய ‘நீயும் நானுமா, கண்ணா நீயும் நானுமா’ பாடலுக்காக ஒரு சில மணி நேரம் எடுத்துக் கொண்ட சம்பவம் அவரது இசைஞானத்திற்கான சான்றாகும்.

எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அவருடைய குரலில் உருவான தமிழ் சினிமா தத்துவப் பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களை அன்றிலிருந்து இன்றைய தலைமுறை வரை அனைவரும் நிச்சயம் எங்காவது கேட்டிருப்போம், கேட்டுக் கொண்டிருப்போம். கேட்டவுடன் ஆட்கொள்ளக் கூடிய அந்த காந்தக் குரலில் உருவான பாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.

  1. வீடு வரை உறவு வீதி வரை மனைவி
  2. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
  3. போனால் போகட்டும் போடா
  4. புத்தன் இயேசு காந்தி பிறந்தது
  5. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
  6. பாட்டும் நானே பாவமும் நானே
  7. முத்தைத்தரு பத்தித் திருநகை
  8. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்
  9. அழகென்ற சொல்லுக்கு முருகா, உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
  10. மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

நிச்சயமாக இந்த பாடல்களில் ஒன்றையாவது இன்றைய தலைமுறையினரும் கேட்டிருப்பார்கள். இந்த காந்தக்குரல் நிச்சயமாக இன்னும் பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்து நிற்கும்.

தமிழ் இசை பொக்கிஷம் T.M.செளந்தரராஜன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo