Cinema News Specials Stories

“தில்”லானா மோகனாம்பாள் !!!

பொதுவாக மூவி போஸ்டர்களில் வித்தியாசமான பரிமாணத்தை உருவாக்கி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுவது இக்காலத்தில் ட்ரென்ட் ஆன விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் 1968 ஆம் ஆண்டு வித்தியாசமான மூவி போஸ்டர் ஒன்றை தில்லானா மோகனாம்பாள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது வியப்பூட்டும் விதமாக இருக்கிறது.

சிவாஜி கணேசன், பத்மினி, பாலைய்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வெற்றி திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்“. இப்படம் நடிகர் திலகம் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் போஸ்டர் ஒரு திருமண பத்திரிக்கை வடிவில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

சண்முகசுந்தரம் எனும் சிவாஜியின் கதாபாத்திரத்திற்கும் மோகனாம்பாள் எனும் பத்மினியின் கதாபாத்திரத்திற்கும் திருமணம் ஆகவிருக்கிறது, எனவே அனைவரும் அந்த திருமணத்திற்கு வந்து சுற்றமும் நட்பும் சூழ திருமணத்தை நடத்தி வைக்க கேட்டு கொண்டவாறு இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த திருமண அழைப்பு போஸ்டரில் ” திருவாரூரில் எனது இல்லத்தில் நடக்கும் திருமணத்திற்கு நான்கு நாள் முன்னதாகவே தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து நடத்திவைக்க கேட்டுக்கொள்கிறேன்” என பத்மினியின் தாயாராக நடித்த சரஸ்வதியின் கதாபாத்திரமான வடிவாம்பாள் தனது உறவினர்களை வரவேற்கும் விதத்தில் இந்த அழைப்பிதழ் அமைந்திருந்தது.

அதுமட்டுமின்றி இந்த அழைப்பிதழில் பிரபல நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலு அவர்களின் கதாபாத்திரமான நட்டுவனார் முத்துக்குமார ஸ்வாமியின் பெயரும் இடம் பெற்றிருக்கும். ஸ்ரீ தியாகராஜப் பெருமான் திருவருளால் தை மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு இந்த திருமணம் நடைபெறுமென இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நவீன சினிமா உலகில் பல போஸ்டர்கள் வந்திருந்தாலும், 1968 இல் வெளியான தில்லானா மோகனாம்பாள் திருமண அழைப்பு போஸ்டர் காலத்தால் அழியாத சிறப்பு போஸ்டர் ஆகவே பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற வித்தியாசமான எண்ணங்களை கொண்ட படக்குழு அமைந்ததாலோ என்னவோ இப்படமும் வரலாற்றில் ஒரு முக்கிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Suryan FM Twitter Feed

Suryan Podcast