Cinema News Specials Stories

ரியல் ஹீரோ சோனு சூட் !!!

பிரபல திரைப்பட நடிகர் சோனு சூட் அவர்கள் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இந்திய மக்கள் “நிஜ வாழ்க்கையின் ஹீரோ” என்றே அழைக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் சோனு சூட் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “அருந்ததி” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் சினிமா ரசிகர்கள் மனதில் காலத்தால் அழியாத வில்லன் கதாபாத்திரமாக இருந்து வருகிறது. இவர் பல படங்களில் வில்லனாகவும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இவரது சமூக நற்பணிகள் தான் இவரை ரசிகர்கள் நிஜ வாழ்க்கையின் ஹீரோ என கொண்டாடுவதற்கு காரணம். இந்தக் கொரோனா காலகட்டத்தில் அன்றாட வாழ்வியலை இழந்த பலருக்கும் சோனு சூட் அவர்கள் உதவிகள் செய்து வருகிறார். அவர் செய்த பல உதவிகளுள் சில உதவிகளை இப்பதிவில் காணலாம்.

வெளியூர் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இவர் இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்கள் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு தன் சொந்த செலவில் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்து கொடுக்கிறார். இதனால் பலரும் பயன் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்தூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் இல்லாமல் தனது இரு மகள்களை வைத்து நிலத்தை உழுத வீடியோ ஒன்று ட்விட்டரில் பரவி வந்தது. இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் அவர்கள் அந்த விவசாயியை தொடர்புகொண்டு அவருக்கு புதிய டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். தனது மாடுகளை வறுமையினால் விற்றதே விவசாயியின் இந்த நிலைமைக்கு காரணம் என்று தெரிந்தவுடன் தனது சொந்த செலவில் இரு மாடுகள் வாங்கிக் கொடுப்பதாக உறுதியளித்து பின்னர் அந்த விவசாயிக்கு பெரிதும் உதவும் வகையில் டிராக்டரை வாங்கிக் கொடுத்தார்.

கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கிய நாள் முதலே பலரும் தங்களது வேலையை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு தானே முன்வந்து புதிய வேலை அளித்துள்ளார்.

சமீபத்தில் புனேவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு தெரிந்த கம்பு சுத்தும் கலையை உபயோகித்து ரோட்டில் பிச்சை எடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதைப் பார்த்து மனமுறுகிய சோனு தனது சொந்த செலவில் சாந்தா பாலு பவர் எனும் அந்த மூதாட்டிக்கு சிறப்பு கலைக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார்.

இந்த காலகட்டத்தில் வேலை இழந்து தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிரவாசி ரோஜ்கர் எனும் ஒரு செயலியை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைகிறார்கள்.

திரைப்படங்களில் பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் சோனு சூட் நிஜவாழ்க்கையில் அனைவராலும் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். பிறருக்கு உதவும் பெரிய மனதுடைய சோனு சூட் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags