Specials Stories

உலக வன உயிர் தினம்!

இந்த பூமி பந்தில் மிக சுயநலமிக்க உயிரினம் உண்டு என்றால் அது மனித இனம் தான். இந்த பூமி முழுக்க தனக்கு மட்டுமே சொந்தம் என்று அரக்க குணத்தோடு தன்னுடைய ஆளுமையையும், அறிவையும், விஞ்ஞான வளர்ச்சியையும் பயன்படுத்தி , இந்த உலகத்தையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கொடூர எண்ணத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

ஆனால் இந்த பூமி சிறு தாவரங்கள் முதற்கொண்டு பெரும் மரங்கள் வரை விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனைக்கும் சொந்தமானதாக; உரிமை உள்ளதாக இருப்பதை ஏனோ மனிதன் மறந்து விடுகிறான். தனது தேவைகளுக்காகவும், தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும், வணிகத்தை மேம்படுத்துவதற்காகவும், தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காகவும் காடுகளை அழிக்கவும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யவும் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றான்.

இதனால் ஒரு காலத்தில் பசுமைப் போர்வை போர்த்தியிருந்த இந்த உலகம், மனிதனின் அதீத பேராசையால் காலம் காலமாக கொஞ்சம் கொஞ்சமாக காடுகளை அழிக்கத் தொடங்கி விலங்குகளை வேட்டையாடி பறவைகளின் இருப்பிடங்களை அழித்தொழித்து நீர் நிலைகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து நதிகளின் பாதைகளை தடுத்து நிறுத்தி பெரும் வணிக நிறுவனங்களாகவும் வீடுகளாகவும் தனது பண்ணை நிலங்களாகவும் மாற்றி ஒட்டுமொத்த உலகத்தையும் நிறம் மாற்றி; குணம் மாற்றி… ஒரு காலத்தில் வளமாக இருந்த உலகத்தை இப்போது வறட்சி பாலைவனமாக மாற்றி வைத்த பெருமை மனிதனையே சாரும்.

இப்படி ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு நாட்டிலும் காடுகளை அழிப்பதும் விலங்குகளை வேட்டையாடுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதும் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட ஐநா சபை இதை தடுத்து நிறுத்த வேண்டும், மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் “உலக வன உயிர் நாள்” ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 68வது அமர்வில் தாய்லாந்து நாடு தான் முதன்முதலாக இதன் முக்கியத்துவத்தை முன்னெடுத்தது.

அதனால் 2013 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதியிலிருந்து 14-ஆம் தேதி வரை தாய்லாந்து தலைநகரான பாங்காங்கில் கூடிய ஐக்கிய நாடுகளின் பொது சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாம் தேதி உலக வன உயிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தது. விளம்பரங்கள், திரைப்படங்கள், செய்தித்தாள்கள் என பல வகைகளில் மக்களிடம் வன உயிர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி காடுகளின் தேவைகளையும் விலங்குகளின் உரிமைகளையும் தாவரங்களின் அவசியத்தையும் உணர்த்துவதன் மூலம் இந்த வனத்தையும் அதில் இருக்கின்ற விலங்குகள் மற்றும் தாவரங்களையும் பாதுகாக்க முடியும் என்று ஐநா பொது சபை கருதியதால் வருடம் தோறும் மார்ச் மூன்றாம் தேதி “வன உயிர் தினம்” கொண்டாடப்படுகின்றது.

இந்த வருடம் “Digital Innovation” என்ற தலைப்பில் தொழில்நுட்பம் மூலமாக உலக வன உயிர் தினத்தை மேலும் மக்களிடம் பரவ செய்ய வேண்டும் என்ற கொள்கை இந்த 2024 முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெறும் அரசுகளும் சமூகமும் மட்டும்தான் விலங்குகளையும், காடுகளையும் காக்க வேண்டும். அதில் நமக்கான பங்கு எதுவும் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகை காக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டு, அதில் வாழுகின்ற விலங்குகள் மற்றும் தாவரங்களையும் பாதுகாத்திட வேண்டும்.

ஏனென்றால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்காமல் இருக்கவும், நமது வழி தோன்றல்கள் இந்த இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்பதாலும் ஒவ்வொரு மனிதனும் காடுகளையு,ம் அதில் இருக்கின்ற தாவரங்களையும், அங்கு வாழ்கின்ற விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு மார்ச் 3 ஆம் தேதியான இன்றைய தினத்தில் உலக வன உயிர் தினத்தை நாமும் கொண்டாடுவோம் என சூரியன் எப்எம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Article By RJ K S Nadhan