Specials Stories

சங்கர் மகாதேவன் என்னும் சங்கீதப்புயல்!

சோகம், சோர்வு, கவலை, கஷ்டம் இப்படி எத்தனை எதிர்மறைச் சொற்கள் நம்மகிட்ட இருந்தாலும் அத்தனையையும் உடைத்தெறிந்து, பாசிட்டிவிட்டியை டன் கணக்குல நம்ம காதுல அள்ளிக் கொட்ட ஒரு குரல் இருக்குன்னா அது நம்ம சங்கர் மகாதேவனோட குரல் தான்.

அவர் பாடுனா சாதாரண மெட்டுகளும் சந்தங்களை அள்ளிக்க்கொண்டு சதிராடும். 1967 மார்ச் 3-ந்தேதி மும்பை-ல பொறந்தாரு. இவருக்கு ஐந்து வயது இருக்கும் போது, வீணையே வாசிப்பாரு. அந்த அளவுக்கு பொறந்ததுல இருந்து இசை மேல அவ்வளவு ஆர்வம். காலே காகா என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரிடம் இசை கத்துக்கிட்டாரு. 1988-ல கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிச்சாரு. படிச்சிட்டு கொஞ்ச நாள் பிரபல கணிணி மென்பொருள் நிறுவமான ஆர்க்கிள்-ல வேலையும் பாத்தாரு.

ஆனா அவரால ரொம்ப நாள் இசையுலகத்தில இருந்து தள்ளி இருக்க முடியல… 1993-ல ஜாகிர் ஹுசைன் இசைல இன் கஸ்டடி படத்தில பாடுனாரு. அதுக்கப்பறம் 1998-ல அவரது ஆல்பமான “BREATHLESS” ரொம்ப பிரபலமாச்சு. அதுக்கப்பறம் ஏகப்பட்ட பாடல்களை பாடுனாரு. அதுலயும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைல அவரு பாடுன அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இதுவரைக்கும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்காரு.

பாடகரா மட்டும் இல்ல, இசையமைப்பாளராவும் இவரு 100-க்கும் மேற்பட்ட படங்கள்-ல தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி-ன்னு பல மொழிகள்-ல பணியாற்றி இருக்காரு. ஆளவந்தான், விஸ்வரூபம், யாவரும் நலம் இந்த தமிழ்படங்களுக்கு எல்லாம் சங்கா-எசான்-லாய் மூவர் கூட்டணி கொடுத்த சிறப்பான இசையை யாரும் மறக்க முடியாது. அவரு வி.ஐ.பி படத்தில தமிழ்ல முதல்ல பாடுன நேற்று நோ… இன்று நோ என்ற பாடலே ரொம்ப பாசிட்டிவான பாடல் தான்.

அலைபாயுதே படத்துல பாடுன ”என்றென்றும் புன்னகை“, ரிதம்ல “தனியே தன்னந்தனியே”, ப்ரண்ஸ்-ல “குயிலுக்கு கூ..கூ”, மின்னலேல “ஓ மாமா..மாமா” , பூவெல்லாம் உன் வாசம்ல “தாலாட்டும் காற்றே வா”, கோவில்ல “கொக்கு மீன திங்குமா?“, திருப்பாச்சில “கும்பிட போன தெய்வம்”, சென்னை 28-ல “சரோஜா சாமானிக்காலோ”, பில்லா-ல “வெத்தலைய போட்டேண்டி”, நாடோடிகள்-ல ”சம்போ, சிவசம்போ”, ராவணன்ல ”காட்டு சிறுக்கி”, இன்று நேற்று நாளைல “காதலே காதலே” இப்படி இவரு பாடுனதுல முக்கால்வாசி பாடல்கள் ரொம்ப எனர்ஜியான பாடல்கள் தான்.

அதவிட சோகப்பாடல்களிலும் நம்ம சொக்கவச்சுருவாரு. சுப்பிரமணியபுரத்துல இருக்க காதல் சிலுவையில் பாடலை தனியா கேட்டுப்பாருங்க உங்க மனசுக்குள்ள ஒரு சிலுவைய தன்னோட குரல் மூலமாக நிறுத்தி வச்சிருவாரு சங்கர் மகாதேவன். தமிழ்-ல கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்கு ஒரு தடவையும், ஹிந்தியில இரண்டு முறையும் சேர்த்து மூன்று முறை தேசிய விருதுகளும், இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும், ஒரு முறை கிராமி இசை விருதும் வாங்கிருக்காரு.

ரிதம், அரண்மனை 3 ஆகிய படங்களில் பாடல் காட்சியிலும் தோன்றி சிறப்பு தோற்றமும் கொடுத்துருக்காரு… இது தவிர பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து நிறைய திறமையான இளம்பாடகர்களை கண்டறிந்து உலகத்துக்கு அறிமுகம் செய்துள்ளார். இன்று 57 வது பிறந்தநாள் காணும் சங்கர் மகாதேவன் என்னும் இந்த இசைப்புயல் இன்னும் பன்னெடுங்காலம் இந்திய இசை உலகத்தில் மையம் கொள்ள வாழ்த்துகிறது சூரியன் எஃப் எம்.

Article by RJ Stephen