Specials Stories Trending

இளையராஜாவின் இளைய ராஜா !!!!

பரபரப்பான சென்னையின் காலை நேர சாலை, போக்குவரத்து நெரிசல் முற்றும் பொழுது திடீரென பொழிகிறது மழை, கனமழை !!! அனைவரும் சாலையோரங்களுக்குள் பதுங்குகின்றனர், புயலென ஒருவன் பைக் கில் சாலையின் நடுவே வருகிறான், அவனுக்கு முன் வருகிறது யுவனின் இசை, அதுவரை பார்த்திடாத அந்த முகத்தை நம் மனதில் நாயகனாக பதிய வைக்கிறது அந்த இசை , எங்கெங்கோ சிதறிய நம் கவனத்தை ஒருங்கிணைத்து அந்தக் கதையோடு ஒன்ற செய்வார் யுவன் சங்கர் ராஜா…!

பொதுவாக திரைப்படங்களில் வரும் பின்னணி இசை, காட்சிகளை கொஞ்சம் மெருகேற்றும், அல்லது உரு மாற்றும். ஆனால் யுவனின் இசை நமக்கு கதை சொல்லும், பாத்திரத்தின் கணம் சொல்லும், யாரும் பேசா மொழி பேசும், புலப்படாத பொருளுணர்த்தும், புதிர் விளக்கும், பயமுறுத்தும், மயிலிறகால் மனம் வருடும், இப்படி திரைப்படம் சொல்ல விரும்பும் அத்தனை உணர்வுகளையும் நமக்கு BGM மூலம் கடத்துவதில் யுவன் ஒரு பிகாசோ

ஒரு காட்சி,

 கடைக்கோடி கிராமத்தில் எந்த ஒரு நெறியும் இன்றி இளைஞன் ஒருவன், மது, மாது, சூது என அனைத்திலும் அடைபட்டு சுகபோகியாக வாழ்கிறான், அவனை நல்வழிப்படுத்தி அவனோடுதான் வாழ்வேன் என கங்கணம் கட்டிக் கொண்டு வாழும் காதலிக்காக மனம் மாறுகிறான், அவளைக் கரம் பிடிக்க வேண்டி கடவுளை வணங்க தெரியாமல் மறைந்த தன் தாய் தந்தையின் புகைப்படத்தை பார்த்து, தொழுது திருநீர் வைக்கிறார் அப்பொழுது மலர்கிறது யுவனின் இசை…

வருவதை பார்த்துக்கலாம்னு, உடனே ஒரு சைக்கிள் எடுத்துக்கிட்டு நாயகன் பொண்ணு கேக்க கிளம்பிடுவான். அத்தனை உணர்வுகளையும் நமக்கு கடத்தி அந்த இசையோடு நாமும் அந்த நாயகனோடு சைக்களில்  பயணிப்போம்.

தனுசுக்கு வாழ்க்கை கொடுத்ததில் இருந்து அஜித் “தல” எடுத்தது வரைக்கும் யுவனின் தயவில்தான் நிகழ்ந்துள்ளது , பில்லா, பில்லா-2, ஆரம்பம், மங்காத்தா என அஜித்தோட பல படங்கள்ல ஸ்லோமோஷனில் அஜித் நடந்து வர்ற காட்சிகள Mass ஆக மாற்றியதில் யுவனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இன்றுவரை , ஏன் எத்தனை வருடங்கள் ஆனாலும், கதாநாயகனின் Mannerism கொஞ்சம் கெத்தாக காட்ட மங்காத்தா படத்தின் BGM ஒரு reference ஆக இருக்கும்.

செல்வராகவனும் யுவனும் இணைந்தால் யுவனோட மாயாஜாலம் இன்னும் பிரமாதமாக இருந்தது, காதல்கொண்டேன் திரைப்படத்தில், “திவ்யா… திவ்யா“என தனுஷ் ஆடும்போது பின்னாடி ஒலிக்கிற இசை நம் மனதை தொட்டு துளையிட்டு மூளையில் புகும்,

 வடசென்னை மக்களின் வாழ்வியலை புதுப்பேட்டை படத்தின் இசையைக் கேட்டாலே அதை முழுவதுமாக உணர முடியும்.

எங்கே இசை வேண்டும், வேண்டாம் என இடம் பார்த்து இசை கோர்த்திருப்பார் யுவன், படத்தின் ஆரம்பத்தில் தனுஷ் பள்ளிக்கு செல்வதற்கு முன் கண்ணாடி பார்த்து தலை வாரிக் கொண்டிருப்பார், அப்போது பின்னணியில் ஒரு இசை ஒலிக்கும் அவர் தலையை அசைத்துக் கொண்டே தலை வாருவார், நம்மில் பலரால் அந்த இசையை வரும்பொழுது தலையை அசைக்காமல் இருக்க முடியாது, இறுதிக்காட்சியில் வில்லனை கொலை செய்ய அவன் வீட்டிற்கு ஒரு அரிவாளுடன் தனி ஆளாக வருவார் தனுஷ், வில்லனின் அடியாட்கள் புடைசூழ்ந்து சரமாரியாக தனுசை தாக்க ஆரம்பிப்பார்கள், ஒரு நொடி நிதானித்து விட்டு ரத்தம் சொட்ட சொட்ட தன் தாக்குதலை ஆரம்பிப்பார், யுவனின் இசையோடு…. அந்த நொடி பதற்றத்தைப் போக்கி நம்மையும் வெறி கொள்ளச் செய்யும் அந்த இசை அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனி…!
 யுவன் செல்வாவின் சிறந்த பின்னணி இசை மட்டுமல்ல தமிழ் சினிமாவில் மிக சிறந்த பின்னணி இசை கொண்ட படங்களில் மிக முக்கியமான படம் 7ஜி ரெயின்போ காலனி.

கதிர், அனிதா என்ற அந்த கதாபாத்திரங்கள் நம் மனதில் பதிந்ததை விட யுவனின் இசை நம்மில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும். ஒரு காட்சியில் பஸ் ஸ்டாப்ல கதிரும் அவரது நண்பர்களும் காத்திருக்கும் பொழுது, அனிதா யாரை பார்க்கிறார்..? அப்படின்னு ஒரு சண்டை வரும், சரி இன்னைக்கு பார்க்கலாம்னு எல்லோரும் முடிவெடுத்து காத்திருப்பார்கள், அப்பொழுது அங்கு தன் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் அனிதா வருவார், அப்போது ஒலிக்கும் யுவனின் இசை தரும் பரபரப்பு, பரிதவிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. பொதுவாக பின்னணி இசை அமைக்கும் பொழுது அந்தப் படத்தில் உள்ள பாடல் tune இல் பின்னணி இசைப்பது வழக்கம்  ஆனால் யுவனின் BGM இல் இருந்தே பல பாடல்கள் எடுக்கமுடியும்

காதல் கொஞ்சம் விசித்திரமானது, காதலால் நம் மனதில் சற்றும் எதிர்பாராத சமயத்தில் எழும் புதுப் புது சந்தோஷத்தை விவரிக்க, புரியவைக்க தமிழில் வார்த்தைகள் உண்டா என தெரியவில்லை! ஆனால் அதை ஓங்கி உரைக்க, நமக்கு தெளிவாக உணர்த்த, யுவனின் இசை என்றும் தவறியதில்லை, அறிந்தும் அறியாமலும் , சர்வம், தீராத விளையாட்டுப் பிள்ளை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பானாகாத்தாடி, தீபாவளி, காதல் சொல்ல வந்தேன், பையா என பல படங்களில் நாயகியின் பார்வை பட்டால் யுவன் இசைக்கும் இசை காதலையே காதல் செய்ய தூண்டும்.

அதேசமயம் காதலி பிரிந்தால், காதல் தோற்றால், அந்த வலியை இன்னும் ரணமாக மாற்றுவதும் யுவனின் பெருஞ்சிறப்பு. கோவா , மௌனம் பேசியதே, ஆதலால் காதல் செய்வீர், காதல் கொண்டேன், ஆகிய படங்களில் வரும் BGM  கண்ணீரோடு நம் மனதையும் வற்றவைக்கும்.

யுவனின் எத்தனையோ திரைப்படங்களின் இசையைப் பற்றிப் பேசினாலும் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் பின்னணி இசை பற்றி பேசவில்லை என்றால் அது முழுமை பெறாது. ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு Frameமும் ஒவ்வொரு உணர்வை நமக்குத் தர வேண்டிய கட்டாயம் இருக்கும். பல கதாபாத்திரங்கள் நிறைந்த திரைப்படம் அது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆழமும் நமக்கு தெளிவாகவும் அதன் நேர்மையையும் நமக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும், அவ்வளவு அற்புதமாக இசை அமைத்திருப்பார், படத்தில் கொடுக்காப்புளி என்று வரும் ஒரு சிறுவன் கதாபாத்திரத்திற்கு அவனின் சமயோசித புத்தியையும் அவனின் வறுமையையும் அவனுக்கு நேரும் இக்கட்டான சூழ் நிலைகளையும் யுவனின் இசை, நம் மனதில் அவ்வளவு நெருக்கமாக ஒலிக்கும். ஒரு ஒற்றை வயலின் நம் உயிர் உருக்கும்.


பட்டியல், வேல், சண்டைக்கோழி, ராம், பூஜை, தாமிரபரணி படங்களில் சண்டைக்காட்சிகளில் யுவனின் இசை ஆக்ரோஷமாக இருக்கும், ஆனால் ஆரண்ய காண்டம் படத்தில் சண்டைக்காட்சிகளில் யுவனின் இசை ஒரு புதுவித மெலடியாக இருக்கும், இசை மொழி அறிந்தவர்கள் இது மெக்ஸிகன் இசையமைப்பு முறை, மேஜிக்கல் jazz என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள், ஆனால் நமக்கு அது யுவனின் இசை. 
இதேபோன்று சூப்பர் டீலக்ஸ் படத்தில் மற்றொரு சிறுவன் நீண்ட நாட்களாக தன் தந்தையின் வருகைக்காக காத்திருப்பான். அவன் மட்டுமல்ல தன் குடும்பமே காத்திருக்கும் அந்த காத்திருப்பின் வலியும், தன் தந்தை வரப்போகிறார் என்ற பரபரப்பையும் ஒருங்கே சேர்த்து யுவன் ஒரு இசை அமைத்திருப்பார், பெரும் திருப்பமாக தந்தை திருநங்கையாக காரில் வந்து இறங்கிய உடன் அந்த இசை அப்படியே நகைப்புக்குரியதாக மாறும்.

 காதல், கோபம், சோகம், வெட்கம், ரௌத்திரம்  இவை மட்டுமல்ல நகைச்சுவையையும் யுவனின் இசை தர தவறியதே இல்லை,

 “வின்னர் கைபுள்ள” என்றாலே அவருக்கு தந்த பின்னணி இசை நம் மனதில் என்றும் நீங்காது, சிவாமனசுலசக்தி “செல்போன் டியூன்”, சென்னை 28 படத்தில் வரும் “பேட் தீம்”, யாரடி நீ மோகினி படத்தில் வரும் “சரண்யாவின் தீம்”, என அத்தனையும் அத்தனை நகை ஊட்டுபவை.

நவரசம் என்ற உடன் தான் ஒரு விஷயம் தோன்றுகிறது, எண்பதுகளில் ராஜாவும் 90களில் ரகுமானும் அசைக்கமுடியாத ராஜாங்கம் நடத்தி வந்தனர் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள் ஏனென்றால், உண்மையும் அதுதான்…! யுவனின் பின்னணி இசையில் ராஜாவின் சாயல் இருக்கிறது என்று சிலர் குறை சொல்வதுண்டு, இன்றிருக்கும் இசையமைப்பாளர்களில் யாரிடம் தான் இசைஞானியின் சாயல் இல்லாமல் இருக்கிறது?, யுவனை குறை சொல்ல… ஆனால் யுவனின் remastering யுக்தி அந்த இசையை மேலும் அழகாக்கியிருக்கிறதே தவிர அபத்தமாகவில்லை, ஆனால் ராஜா மற்றும் ரஹ்மானின் ஒரு கலவையாக யுவன் இருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல, யுவனோட அந்த பார்முலாவை தான் இன்னைக்கு வர பல மியூசிக் டைரக்டர்ஸ் பயன்படுத்திட்டிருக்காங்க, இப்போ அவன் இவன்னு எவன் மியூசிக் டைரக்டர் ஆனாலும் அவன் இவன் படத்தில் யுவன் போட்ட உலகத்தரமான மியூசிக் பற்றி சொல்லி நிறைவு செய்கிறேன். ஒரு காட்சியில் நடிகர் விஷால் நவரசத்தை நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவார். அவர் சரியா பண்ணாரா தெரியல, ஆனால் அவர் நடிக்கும்போது வந்த அந்த பின்னணி இசை நவரசத்தை அள்ளி தெளித்து இருக்கும், ஒரு கட்டத்துல நம் கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் கசிய செய்யும் அந்த இசை.

இன்னும் எவ்வளவோ இருக்கின்றது யுவனின் இசையைப் பற்றி எழுத ஆனால் அதைவிட சுவாரசியம் யுவனின் இசையை ரசிப்பது…!
யுவனை கொண்டாடுவோம்… இல்லை யுவனோடு நம் வாழ்வை கொண்டாடுவோம்….!!!! யுவன் வாழ்க..!

Article by Roopan Kanna