இரவு பொழுதுகளில் சுடாத சூரியனாய்; மின்சாரம் இல்லாத ஒளி விளக்காய், உலகத்தை வெளிச்சத்தில் உலவச்செய்யும் நிலாவை பற்றி ,எழுதாத கவிஞர்களே இல்லை; அதை ரசிக்காத மனிதர்களே இல்லை. நமது பாலிய காலங்களில் அந்த பால் நிலா பற்றி நிறைய கதைகள் சொல்ல கேட்டிருப்போம். எல்லாம் கட்டுக்கதைகள் கற்பனைக் கதைகள் என்று பிற்பாடு தெரிந்தாலும் ,அந்த கதைகளை கேட்ட தருணங்களை இப்போது நினைத்தாலும் நாம் ரசித்து ரசித்து சிலாகிப்போம்.
இப்படி நமக்கும் நிலாவுக்குமான தொடர்பு ,தூரம் கடந்தும் அருகில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலவுக்கு நேரடியாக சென்றால் என்ன என்று அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த “ஜான் எப் கென்னடிக்கு’ உதித்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அமெரிக்காவின் எதிரி நாடான, வல்லரசு நாடுகளில் ஒன்றான “சோவியத் யூனியன்” 1957 ல் ‘லைக்கா’ என்ற நாயை ‘ஸ்புட்னிக்’ என்ற விண்கலத்தில் வைத்து விண்வெளிக்கு அனுப்பி சாதனை புரிந்தது.
நான்காண்டுகள் கழித்து 1961இல் ‘வோஸ்டாக் 1’ என்ற விண்கலத்தில் யூரிகாகிரின் என்ற ரஷ்ய விண்வெளி வீரர் முதன்முதலாக விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்தார் .இதெல்லாம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய போட்டியாக அமைந்தது. அதனால் தான் முதல் முதலில் நிலவுக்கு ஒரு அமெரிக்கரை அனுப்ப வேண்டும் என்று அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி நினைத்தார். அதற்காக பல திட்டங்களை தீட்டினார். ஆனால் எதிர்பாராத விதமாக துரதிருஷ்ட வசமாக 1963 ல் ஜான்ஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டார். இருந்தாலும் அவர் நினைத்ததை போன்று நிலவுக்கு மனிதனை அனுப்புகின்ற முயற்சி படுவேகமாக நடந்து கொண்டிருந்தது.
1969ல் அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் ஜூலை மாதம் 16ஆம் தேதி 3 விண்வெளி வீரர்களை பல்வேறு பரிசோதனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பிறகு நிலவுக்கு அனுப்ப நாசா முடிவு செய்தது. அப்படி அவர்கள் புறப்படுகின்ற அந்த காட்சியை 19 மாநில கவர்னர்கள், 40 மேயர்கள், 60 வெளிநாட்டு தூதுவர்கள், 200 எம்பிக்கள், அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த ஸ்பைரோ அடக்னியூ, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன், அவருடைய மனைவி 3500 ஊடகவியலாளர்கள் நேரடியாக பார்க்க 33 நாடுகளில் தொலைக்காட்சிகளில் இந்த காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த காட்சியை பார்த்தார்கள் .19690ஜூலை மாதம் 16ஆம் தேதி இந்த அப்பல்லோ 11 என்ற விண்கலம் புறப்பட்டது. அந்த விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் இருந்தார்கள் அவர்கள் ‘ஆல்ட்ரின்ன’, ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ மற்றும் ‘காலின்ஸ்’. இந்த மூவரை சுமந்து சென்ற அப்பல்லோ 11 என்ற அந்த விண்கலம் 4 நாள் பயணத்திற்கு பிறகு 1969 ஜூலை 20 ஆம் தேதி, நாம் அதுவரை பார்த்து ரசித்த -தொட முடியாத தூரத்தில் இருக்கின்ற நிலவுக்கு சென்றடைந்தது. திட்டப்படி முதலில் இறங்க வேண்டியது ஆல்ட்ரின் தான்.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட தயக்கம் சந்தேகம் போன்ற உணர்வுகளால் அந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த முடியாமல் தயங்கி நின்றார். அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அடுத்ததாக இறங்க வேண்டிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்தார் .புதிதான ஒரு இடத்திற்கு செல்கின்ற பொழுது வலது கலைத்தான் வைத்துச் செல்ல வேண்டும் என்ற மரபுகளை எல்லாம் உடைத்து விட்டு தனது இடது காலை வைத்து நிலாவில் கால் பதித்தார். வரலாற்று புகழ்மிக்க, காலத்தால் அழிக்க முடியாத அந்த சிறப்பான தருணத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார் ஆம்ஸ்ட்ராங் என்னும் நிலவில் கால் பதித்த முதல் மனிதர். அதற்குப் பிறகு 19 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரினும் நிலாவில் இறங்கினார்.
இருவரும் இரண்டு கால் மணி நேரம் நிலவில் தங்களுடைய நேரத்தை செலவழித்தார்கள். நிலவிலிருந்து 21. 5 கிலோ நிலவின் பல்வேறு கற்களையும் மணல் துகள்களையும் எடுத்து வந்தார்கள். மனித குலத்தின் ஆச்சரியமான சாதனையை நிகழ்த்தி விட்டு நான்கு நாட்கள் கழித்து ஜூலை 24ஆம் தேதி 1969இல் மீண்டும் உலகுக்கு அந்த மூவரும் திரும்பி வந்தபோது உலகமே அவர்களை கரகோஷத்தால் வரவேற்றது. இப்படிப்பட்ட ஆகச் சிறந்த சாதனையை நிகழ்த்தி காட்டி மனித குலத்தின் அறிவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டு போய் ,விஞ்ஞானத்தின் உச்சத்தை தொட்ட அந்த நிலவு பயணம் MOON WALK என்று அழைக்கப்படுகின்றது. அந்த நிகழ்வு நடந்தது 1969 ஜூலை மாதம் 20ஆம் தேதி ,இதே நாளில் தான்.
Article by – KS Nathan, Covai.