நடப்பு ஆண்டின் பதினோரு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வரை(26-11-2025) சுமார் 250 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இது, தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரே ஆண்டில் வெளியான அதிகபட்ச திரைப்படங்களின் எண்ணிக்கை என்று கூறப்படுகிறது!
250 திரைப்படங்கள் என்பது கிட்டத்தட்ட வாரத்திற்கு சராசரியாக 5 படங்கள் வெளியாகி இருக்கின்றன என்பதைக் குறிக்கிறது. சில வாரங்களில், குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், 10-க்கும் மேற்பட்ட படங்களும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களின் வெளியீட்டு எண்ணிக்கை வரலாறு காணாத உயரத்தை அடைந்திருந்தாலும், அதன் Success Rate பெரும் கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. இந்த 250 படங்களில் வணிக ரீதியாக லாபம் ஈட்டிய படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கோலிவுட் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, இந்த 250 திரைப்படங்களில் சுமார் 10 முதல் 15 படங்கள் மட்டுமே (தோராயமாக 6%) தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஓரளவுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கின்றன.
பெரிய பட்ஜெட்டில், முன்னணி நட்சத்திரங்கள் நடித்த சில படங்கள் கூட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், தோல்வியைத் தழுவியது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், சிறிய பட்ஜெட்டில் வெளிவந்த சில தரமான படங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சத்தமில்லாமல் லாபம் பார்த்துள்ளன.
சினிமா என்பது ஒரு வியாபாரம். ஒரு வருடத்தின் பெரும்பகுதி படங்கள் தோல்வியைத் தழுவும்போது, இந்த அதிகப்படியான தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது.
இந்த வெளியீட்டு எண்ணிக்கை ஒரு சாதனையாக இருந்தாலும், அது தரத்தை உறுதி செய்யவில்லை என்பதே தமிழ் சினிமா சந்தித்த மிகப் பெரிய சவாலாக உள்ளது. இனி வரும் ஆண்டுகளில், எண்ணிக்கை என்பதை விட, தரமான மற்றும் ரசிகர்கள் விரும்பும் படங்களை மட்டுமே வெளியிடுவதற்கான ஒரு புதிய பாதை உருவாகுமா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Article By – சதீஸ்குமார் மனோகரன்

