‘செந்தமிழ் நாடெனும்போதினிலே இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே’என்றார் மகாகவி பாரதி. தமிழ் என்ற பெயரை தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டே வந்தால் அது, அமிழ்து என்றே முடியும் என்கின்றனர் அறிஞர்கள் . உலகிலேயே இயற்கையுடன் இயைந்து பேசக்கூடிய மொழி என்கிற பெருமை பெற்றது நம்முடைய தாய்மொழி. உச்சரிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையும் கம்பீரமும் வழங்கும் மொழியாகவும் திகழ்கிறது உதடு பிரிந்தவுடன் நாம் அனைவரும் உச்சரிக்கும் முதல் எழுத்து ‘மா’; அதுவே அம்மாவானது. உலகின் எந்த மொழியில் தாயைக்குறிக்கும் சொல்லும் இந்த மாவின் நீட்சியாகவே முடியும்.
உலகில் தோன்றிய மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி, பல்வேறு மொழிகளுக்கு தாய்மொழியாகவும் விளங்கும் நமது தமிழ் மொழி எப்போது தோன்றியது என்ற காலத்தை இன்னமும் அறிய இயலாத அதிசயமாகவே விளங்கி வருகிறது.உலகில் 5 நாடுகளில் ஆட்சிமொழியாக விளங்கும் ஒரே மொழி தமிழ். பல்வேறு படையெடுப்புகள் தாண்டி இன்றளவும் இளமை குன்றாமல் விளங்கி வரும் மொழி, தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மொழியாக இருக்கிறது. மேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய உலக நாடுகளில் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.
நமது நாடு பல மொழிகளைக் கொண்டது. 19 ஆயிரத்து 500 மொழிகளுக்கு மேல் இங்கு பேசப்படுகிறது என சொல்லப்படுகிறது . இங்குள்ள மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர், பட்டியலிடப்பட்டுள்ள 22 ஒரு மொழியைப் பேசுகின்றனர்.
அதிலும் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் இருந்தன.எனவே தான் நம் தாய்மொழியை செம்மொழி என்கிறோம். செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழைமை அடிப்படையில் தரப்படும் சிறப்புப் பெருமை ஆகும்.
செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும், பழைமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும். மேலும் அம்மொழியானது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழைமையான இலக்கியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் மற்றும் அதன் தொடக்கக்கால இலக்கியங்கள் உயர்தரத்தில் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உலக மொழிகளில் லத்தின், கிரேக்கம், ஹீப்ரு, பாரசீகம் ஆகிய மொழிகள் அத்தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். உண்மையில் “உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே..” என மனோன்மணீயம் சுந்தரனார் வழியில் நாமும் நம் தாய்மொழியை வாழ்த்துவோம்.அதே நேரம் நம் தாய் மொழிக்கு ஆபத்து என்றால் தமிழர்கள் கிளர்ந்து எழுவார்கள் என்பதே வரலாறு.
தமிழ்நாட்டில் பல காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, சி.ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களில் கட்டாய இந்தி குறித்து அவர் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் 1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கான ஆணை இடப்பட்டது. இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும் பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போராட்டங்கள் நடந்த நிலையில், 1940ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. முதலில் சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் தற்போதைய தமிழ்நாடு இருக்கும் பகுதிகளில் விருப்பப் பாடமென்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, தமிழ்நாட்டிலும் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. முடிவில் 1950ல் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ஆட்சி மொழியாக எதனைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. முடிவில் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் கீழப்பழுவூர் சின்னச்சாமி என்பவர் 1964ல் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுமென அறிவித்தார். ஆட்சி மொழிச் சட்டம் செயல்படுத்தப்படும் நாளான 1965ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்தது.அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. ரயில்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் களமிறங்கினர். ஜனவரி 26ஆம் தேதி அதிகாலை சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தீக்குளித்தார்.
ஜனவரி 27ஆம் தேதி அரங்கநாதன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். மேலும் முத்து, சாரங்கபாணி, வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்தனர். மேலும் சிலர் விஷம் குடித்து உயிரிழந்தனர்.ஜனவரி 28ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கலவரங்கள் பிப்ரவரி மாதமும் தொடர்ந்த நிலையில், இந்திய அரசில் அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசனும் இந்தி விவகாரத்தில் தங்கள் அரசின் பிடிவாதத்தை எதிர்த்து பதவி விலகல் கடிதம் அளித்தனர்.
முடிவில், பிப்ரவரி 11ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார். இந்த வாக்குறுதியை அடுத்து பிப்ரவரி 12ஆம் தேதி போராட்டங்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இப்படியாக அன்றைய நாளில் போராட்டங்கள் ஓய்ந்தாலும் மொழிக்கு ஒன்று என்றால் எப்போதும் தமிழக மக்கள் எழுச்சி பெற்று போராடுவார்கள் என்பதற்கு இன்றைய நவீன கால சான்றுதான் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்கிற எதிர்ப்பு.
2019-ல் புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தியது. இதையடுத்து, இந்தி தெரியாது போடா...’,
நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்களை அணிந்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிந்த தமிழ் திரையுலக பிரபலங்கள் ஆகியோரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும், `இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆனது.
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்….
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என்கிற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் வரிகள் அன்றும் இன்றும் என்றும் நமக்கு நம் தாய் மொழியாம் தமிழின் மேன்மையை,நம் மொழிக்கு நாம் அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை,மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் அல்ல அது நம் பண்பாட்டின்,நம் உணர்வின் அடையாளம் என நமக்கு என்றும் உரக்க உணர்த்திக்கொண்டே இருக்கும்.
நீங்களும் மனதின் ஆழத்தில் இருந்து சொல்லுங்கள் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று!
Article By RJ Kannan