தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வரக் கூடிய புரட்டாசி மாதம், பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது. புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்தது புரட்டாசி மாதம், எனவே புதனுக்குரிய பகவானாகிய பெருமாளை வழிபடுவது சிறந்தது. பொதுவாக ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரம், திதி, கிழமை ஆகியவை தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே சிறப்பு பெற்று, புண்ணிய பலன்களை தரும் மாதமாக திகழ்கிறது.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால் சனியால் பாதிப்பு இருப்பவர்கள் புரட்டாசியில், குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபாடுபவரை சனி பகவான் துன்புறுத்துவது கிடையாது. மாறாக அவர்களுக்கு நன்மைகளை மட்டும் வழங்குவதாக திருப்பதி ஏழுமலையானிடம் சனி பகவான் வாக்குறுதி அளித்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை நினைத்து மனதார வழிபாடு செய்தால் புண்ணியமும், புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலனும் கிடைத்து விடும்.
புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்குரிய “ஓம் நமோ நாராயணாய நமஹ” மந்திரங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், நாராயணீயம் சொல்லி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் விசேஷமானதாகும்.
புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வழிபடுங்கள்!
புரட்டாசி மாதம் உங்களுக்கும் புண்ணியத்தை அருளட்டும்!
Article by – சுப்பு (பெரிய தம்பி)

