பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவாகி இன்று வரை வழக்கில் இருந்து வரும் விளையாட்டு சதுரங்கம்.
செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் பலரது வீட்டிலும் செஸ் போர்டு மற்றும் காய்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் சாமானிய மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலைகளில் ஆடம்பரமான செஸ் செட்கள் உள்ளன.
மிக நுட்பமான கைவினைத்திறன் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களுடன் உருவாக்கப்படும் இந்த செஸ் போர்டு மற்றும் காய்கள் உலகளவில் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன. அதில் சிலவற்றை தற்போது பார்ப்போம்.
- The Cybis Chessmen (ரூ. 39 லட்சம்)
1970-களில் சோவியத் யூனியனுக்கு பரிசளிக்கப்பட்ட இந்த செஸ் செட் மொத்தமே 10 தான் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டில் அமெரிக்க கலைஞரான ஹாரி பர்கரால் உருவாக்கப்பட்டது, வரலாற்றில் வரையப்பட்ட ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு மத, புராண மற்றும் வரலாற்று ரீதியில் இந்த காய்கள் உருவாக்கப்பட்டன. இதில் கிங் டேவிட், கிங் ஆர்தர் மற்றும் அலெக்சாண்டர் தி கிரேட் போன்றவர்கள் உள்ளனர்.

10 செட்டுகளில் ஒன்றை சோவியத் ஒன்றியத்திற்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பரிசாக வழங்கியுள்ளார்.
- Charlemagne vs Moors set (ரூ. 1.15 கோடி)
சார்லமேக்ன் vs மூர்ஸ் செட் ஒரு சிறந்த ஐரோப்பிய உலோகத் தொழிலாளியால் உருவாக்கப்பட்டது. 14 வயதில் உலோகத் தொழிலில் நுழைந்த பியரோ பென்சோனி ஐரோப்பாவின் மிகவும் திறமையான உலோக சிற்பிகளில் ஒருவராக இருக்கிறார்.
அவர் உருவாக்கிய அற்புதமான செஸ் போர்டு மற்றும் காய்களானது மாவீரர்கள், கோபுரங்கள் மற்றும் நிஜ வாழ்க்கை ஃபிராங்கிஷ் பேரரசர் சார்லமேனை அடிப்படையாகக் கொண்ட இடைக்கால ஐரோப்பிய போரை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தங்க முலாம் பூசப்பட்ட கால்களானது அந்த இடைக்காலத்து உலோக வேலைப்பாடுகளை ஒத்திருக்கும், சதுரங்க காய்கள் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட திடமான வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும். பலகை கூட ஓனிக்ஸ் எனப்படும் விலைமதிப்பற்ற கற்களால் ஆனது. எனவே இதன் விலை மிக மிக அதிகமானதாக இருக்கிறது.
- The Queen’s Silver Jubilee Limited Edition set (ரூ. 1.53 கோடி)
1977 ஆம் ஆண்டில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பிரிட்டிஷ் விளையாட்டு வடிவமைப்பாளர் ஜெஃப்ரி பார்க்கர், கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் ஒரே மாதிரியான 2 செஸ் செட்களை உருவாக்கினார்.

ஒன்று ராணிக்கான பரிசாகவும் மற்றொன்று விற்பனைக்காகவும் உருவாக்கப்பட்டது. கையால் செய்யப்பட்ட இதன் காய்கள் ஸ்டெர்லிங் வெள்ளி மற்றும் தங்க இலைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பலகையானது உண்மையான எருமை தோலால் செய்யப்பட்டுள்ளது.
ராணியின் வயதைக் கொண்டு செஸ் செட்டின் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
- Royal Diamond set (ரூ. 3.91 கோடி)
ஒரு காலத்தில் உலகின் மிக விலையுயர்ந்த செஸ் செட்டாக இவை இருந்தது. 2005 ஆம் ஆண்டு பிரெஞ்சு நகைக்கடைக்காரர் பெர்னார்ட் மேக்வினால் உருவாக்கப்பட்டது.
மேக்வின் தன்னுடன் 30 கைவினைஞர்களை இணைத்து 1,200 கிராம் எடை மதிப்புள்ள 14-காரட் வெள்ளைத் தங்கத்தைப் பயன்படுத்தி, இதில் உள்ள 32 சதுரங்கக் காய்களையும் 187 நாட்களுக்கு மேல் வேலை செய்து உருவாக்கினார்.

அந்த காய்கள் கூடுதல் பிரகாசத்தை அளிக்க, சுமார் 9,900 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் அதன் மேல் பதிக்கப்பட்டன. இதுவரை 3 செட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
- J Grahl set (ரூ. 5.48 கோடி)
இன்று வரை மிகவும் ஆடம்பரமானதாகக் கருதப்படும் இந்த செஸ் செட் ஒரு பணக்கார குடும்பத்திற்கான கமிஷனாக ஜிம் கிரால் என்பவரால் உருவாக்கப்பட்டது.

வரலாற்றில் குறிப்பிட்ட காலகட்டத்தை ஒத்த உடைகள் மற்றும் கட்டிடக்கலையுடன், இந்த சதுரங்கக் காய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 14-காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த காய்கள் அதிக நேரம் செலவழித்து மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலில் உருவாக்கப்பட்ட செஸ் செட் தொடர்ந்து அதிக விலையில் இருந்து வருகிறது. இருந்தாலும், அடுத்ததாக அதே போன்ற 11 செஸ் செட்கள் செய்யப்பட்டன, ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட RM2 மில்லியன் விலை மதிப்புடையவை.
- The Art of War set (ரூ. 5.48 கோடி)
இந்த செஸ் செட் வடிவமைப்பு சீன வரலாற்றில் அந்த நாட்டின் மாநிலங்களுக்கிடையே போர் நடைபெற்ற காலத்தை அதாவது சன் சூ ‘The Art of War’ புத்தகம் எழுதிய காலத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
தங்கம் மற்றும் ரோடியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த செஸ் காய்களில், மாணிக்கங்கள், மரகதங்கள், வைரங்கள் மற்றும் நீலமணிகளும் பதிக்கப்பட்டுள்ளன. இந்த செஸ் பலகை விலையுயர்ந்தது, அதிக நகை அலங்காரங்களுடன் விலைமதிப்புள்ள கருங்காலி மரத்தால் ஆனது.

இதன் விலை தெரியவில்லை, மேலும் இதை வடிவமைத்த விக்டர் எஃப் ஷார்ஸ்டைன் ஏலத் தொகையான 7 லட்சம் அமெரிக்க டாலர்களை நிராகரித்து விட்டார். இதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
- The Pearl Royale set (ரூ. 31.31 கோடி)
இன்றைய நிலையில் உலகின் விலையுயர்ந்த செஸ் போர்டாக கருதப்படும் பேர்ல் ராயல் செஸ் செட் ஆஸ்திரேலிய பொற்கொல்லர் கொலின் பர்ன் என்பவரால் 2008 இல் தயாரிக்கப்பட்டது.

ஒவ்வொரு காயும் 18 காரட் வெள்ளை தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலில் இருந்து எடுக்கப்பட்ட வைரங்கள், நீலமணிகள் மற்றும் முத்துக்களின் அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த தனித்துவமான தொகுப்பு மிகவும் அரிதாகவே பொது வெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரிஜினல் தவிர்த்து அதே போன்ற மூன்று பிரதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது ஒரே ஒரு முறை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு கொலின் பர்ன்ஸின் தனிப்பட்ட உடைமையாக வைக்கப்பட்டுள்ளது.