சிவபெருமானுடன் தொடர்புடைய மிக முக்கியமான சின்னங்களில் ஒன்று திரிசூலம் ஆகும். இது அவரது தெய்வீக சக்தியையும் பிரபஞ்ச அதிகாரத்தையும் குறிக்கிறது. மனித குணங்கள் மூன்று குணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன – சத்வா (தூய்மை, அறிவு), ரஜஸ் (செயல்பாடு, ஆர்வம்), மற்றும் தமஸ் (மந்தநிலை, இருள்). திரிசூலம் இந்த மூன்று குணங்களையும் குறிக்கிறது. பிரபஞ்சத்தின் மீதான தனது தெய்வீக சக்தியையும் அதிகாரத்தையும் குறிக்க சிவபெருமான் திரிசூலத்தை எப்போதும் ஏந்தி இருக்கிறார். திரிசூலத்தால் தீமையை அழிப்பவராகவும், பிரபஞ்சத்தைப் பாதுகாப்பவராகவும் அவர் திகழ்கிறார்.
திரிசூல மகிமை :
பிரபஞ்சத்தின் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்கும் திறனையும் இது எடுத்துக் காட்டுகிறது. இது உலகப் பற்றுகளைத் துறந்து, அகங்காரத்தை வெல்லக் கூடிய போதனைகளையும் குறிக்கிறது. திரிசூலம் ஒரு தற்காப்பு ஆயுதமாக செயல்படுகிறது. எதிர்மறை சக்திகளைத் தடுத்து, பக்தர்களைப் பாதுகாக்கிறது.
திரிசூலம் பாதுகாப்பையும் செல்வத்தையும் அளிக்கிறது. அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. காசி நகருக்கு, ‘அவிமுக்தம்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இதற்கு அழிவற்றது என்று பொருள். இத்தலத்தையே திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாகப் புராணம் கூறுகின்றது. திரிசூலத்தை தனியாக வழிபடுவதை விட, சந்திரசேகரர் திருவுருவத்தில் சாத்தி வழிபடுவது சிறப்பு.
அம்பிகை திரிசூலம் :
அம்பிகையின் கையில் உள்ள திரிசூலம் மனம், வாக்கு, உடல் என்னும் மூன்றையும் குறிக்கும். மனம் நினைப்பதை தான் பேச (வார்த்தையாக) வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் கூடாது. சொன்னதை காப்பாற்ற உடல் என்னும் கருவியை பயன்படுத்த வேண்டும். இதுவே சூலத் தத்துவம். இதற்கு படைத்தல், காத்தல் அழித்தல் என்றும் சொல்வதுண்டு. திரிசூலத்தை வணங்கினால் கண்ணுக்குப் புலனாகாத பகை விலகும். பொன்னால் திரிசூலம் செய்து அதைச் சுற்றிலும் எட்டு ஆயுதங்களை நிலைப்படுத்தி, அஸ்திர பூஜை செய்வர். அத்தி மரத்தாலும், கருங்காலி மரத்தாலும் சூலங்கள் செய்து வழிபடுகின்றனர்.
திரிசூல வழிபாடு :
பொன்னால் திரிசூலத்தைச் செய்து, அதைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிலும் அஷ்டாயுதங்களை நிலைப்படுத்தி அஸ்திர பூஜை செய்வர். அத்தி மரத்தாலும், கருங்காலி மரத்தாலும் சூலங்களைச் செய்து வழிபடுகின்றனர். சூலத்தின் மையத்தில் மூன்று கிளைகளில் சிவபெருமானையும் இடது கிளையில் திருமாலையும் வலது கிளையில் பிரம்ம தேவனையும், மூன்றும் கூடுமிடத்தில் விநாயகர், முருகன், வீரபத்திரர், சாத்தன் ஆகியோரையும் அதன் கீழுள்ள கண்டத்தில் ஏகாதச ருத்திரர்களையும், அதன் கீழுள்ள பத்மத்தில் அஷ்டமாத்ருகா, அஷ்டலட்சுமிகள் ஆகியோரையும் பூஜிக்கின்றனர்.
Article by – Rj Vgithra, Salem.

