வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டுவது என்பது தொன்று தொட்டு பின்பற்றி வரக்கூடிய நம்முடைய கலாச்சார பண்பாட்டு வழக்கம் தான் என்றாலும்,
பசுமையான மாமரத்து இலைகள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறையான சக்திகளை உள்வாங்கிக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ள காற்றை தூய்மை செய்யும் என்றும்,
வீட்டிற்குள் நேர்மறை அதிர்வுகளைக் கொண்டு வரும் என்றும் பெரியோர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும், செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி மாவிலையில் வீற்றிருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில் வரவேற்கவும்,
இல்லத்திற்கு வருகை புரியும் விருந்தினர்களை தூய மனதுடன் மரியாதையுடன் வரவேற்பதின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.
பொதுவாகவே வீட்டின் நுழைவு வாயிலில் மாவிலைகளாலும், பூக்களாலும் அலங்கரித்து வைப்பது என்பது மங்கலத்தினுடைய அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
மாவிலைத் தோரணம் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்ப்பதாகவும்,
வாழ்வில் பல வளங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாகவும் நம்பிக்கை நிரம்ப இருக்கிறது.
மாவிலை கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை அதிகம் வெளியேற்றுவதால் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று சுத்தமாகிறது.
ஈ,கொசு போன்றவை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்கிறது.
மா இலைகளின் பச்சை நிறம் மனதுக்கு அமைதியைத் தருகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது.
ஆன்மீக சிந்தனையை மேலோங்க வைக்கிறது .
வீட்டின் மதிப்பையை யும்,புனித தன்மையையும் அதிகரிக்கிறது
என்றெல்லாம் தான் நம் முன்னோர்கள் வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டும் பழக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்களின் பயன்பாட்டு முறைகளைப் பின்பற்றி நாமும் ஆரோக்கியமும் ஆனந்தமும் பெறுவோம்.
Article By – N. செல்வராஜ், கோவை.

