ஒளி வடிவான இறைவனை விளக்கேற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்க செய்யும் என்று சொல்வார்கள்.
நோய் தொற்றுக்களை பரவ விடாமல் தடுக்கக்கூடிய சக்தி சில எண்ணெய் வகைகளுக்கும், நெய்யு க்கும், தீபத்திற்கும் உண்டு என்பதனால்தான் வீடுகளில் காலை மாலை என இருவேளைகளிலும் விளக்கேற்றுவது அவசியம் என்று சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள்.
விளக்கின் ஒளியில் கலைமகள் சரஸ்வதி தேவியும், விளக்கின் சுடரில் திருமகள் லட்சுமியும்,விளக்கின் வெப்பத்தில் மலைமகள் பார்வதி தேவியும் குடியிருப்பதாக ஐதீகம்.
வீடுகளில் தினமும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள்ளும் மாலையில் 4:30 மணி முதல் 6:00 மணிக்குள்ளும் விளக்கேற்றிட வேண்டும்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல் ஒளி வடிவில் வழிபட்டு பலன் பெறவும், பரஞ்சோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவஜோதி ஆகிய ஆன்மாக்கள் இரண்டற கலக்கவும் செய்வதே விளக்கேற்றும் வைபவத்தின் தத்துவம் ஆகும்.
சரி. வீடுகளில் விளக்கேற்ற காமாட்சி விளக்கை அதிகம் பயன்படுத்துகிறோமே ஏன்?
உலக மக்களின் நன்மைக்காக காமாட்சியம்மன் கடும் தவம் புரிந்திருக்கிறார். அப்போது சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கினார்களாம். அதனால் தான் காமாட்சியம்மனை ஒருவர் வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்றார்கள் முன்னோர்கள்.
காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதனால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்கினால் அம்மனின் அருளையும், குலதெய்வத்தின் ஆசியையும் ஒரு சேர பெற்று விட முடியும் என்றும் நம்பினார்கள்.
குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை குல தெய்வமாகவே வழிபடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
அம்மனின் அருளும் குலதெய்வத்தின் அருளும் நாம் ஏற்றக் கூடிய காமாட்சி விளக்கின் மூலமாக கிடைக்கப்பெறும் என்கிற நம்பிக்கையும் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றினால் குலம் தழைத்து வளரும் என்ற நம்பிக்கையும் தான் வீடுகளில் காமாட்சி விளக்கை அதிகம் பயன்படுத்த காரணமானது என்கிறார்கள்.
மேலும் எல்லா மங்கள நிகழ்வுகளிலும் காமாட்சி விளக்கு வைப்பது வீட்டின் ஆன்மீக மற்றும் உடல் நலன்களை மேம்படுத்தும் என்றும், குடும்பத்தின் ஒற்றுமை, அமைதி மற்றும் சக்தியை ஊக்குவிக்கும் செயல்பாடு என்றும் கருதியதனால் “காமாட்சி விளக்கை” முதன்மையானதாக்கி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
Article By செல்வராஜ், கோவை.