விநாயகருக்கு படைக்கும் மோதகம், கொழுக்கட்டை உணர்த்தும் வாழ்வியல் தத்துவம் தான் என்ன?
முழு முதற்கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி விழா.
அன்றைய தினம் விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொறி, சர்க்கரை பொங்கல், சுண்டல் இப்படி எவ்வளவோ உணவுகள் படைக்கப்பட்டாலும் விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவு கொழுக்கட்டை.
தேங்காய், வெல்லப்பாகு,அரிசி மாவால் செய்யப்படக்கூடிய இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை ஒளிந்திருப்பதாக சொல்லுவார்கள்.

“மோதகத்தின் மேல் தோலாக இருக்கக்கூடிய மாவுப்பொருள், அண்டம், அதன் உள்ளே இருக்கக்கூடிய பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கக்கூடிய பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை.”
அந்த மாயை அகற்றினால் பூரணத் துவமான நல்ல பண்புகள் வெளியாகும்.
இதுவே மோதகம் உணர்த்தக்கூடிய தத்துவம் என்கிறார்கள், ஆன்மீகப் பெரியோர்கள்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன்பகுதி விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதையும்,
வெள்ளை நிற வெளிப்பகுதி எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதையும் தெரிவிக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை மக்களுக்கு உணர்த்தவே பக்தர்களால் இறைவனுக்கு மோதகமும், கொழுக்கட்டையும் படைக்கப்படுகிறது என்பது பெரியோர்களின் பதிவாக இருக்கிறது.
Article By – என். செல்வராஜ், கோவை.