ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியை வணங்கி, “அன்னையே! தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப் பெற வழி என்ன?.”
“பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது? “இப்படி பக்தியோடு கேட்டு இருக்கிறார்கள்.
மலர்ந்த முகத்துடன் மகாலட்சுமி தேவர்களை நோக்கி, “தேவர்களே! எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து நீராடி தங்களை புனிதப்படுத்திக் கொண்டு என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ…
எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களோ…..
எந்த குடும்பத்தில் கணவனும் மனைவியும் நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மன வேறுபாடும் இல்லாமல் என்னை வழி
படுகிறார்களோ….
எங்கு ஆச்சாரம்! குறைவின்றி கடைபிடிக்கப்படுகிறதோ..
எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ…
எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும் தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ….
எங்கு கோ பூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அந்த வகையில் அதிகாலை எழுவது, நீராடுவது, இல்லத்தை தூய்மையாக வைத்திருப்பது, கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்க வாழ்வது,
தான தர்மங்கள் செய்வது, நம்முடைய வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய உயிரினங்களை பேணிப் பாதுகாப்பது, எல்லோரிடமும் அன்பு பாராட்டி நல்ல செயல்பாடுகளோடு வாழ்வது என்று இருந்தால் மகாலட்சுமியின் அருள் பார்வையை நாம் பெறலாம்.
ஒரு சமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தார்களாம்.
ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இன்னொரு வீட்டிலே மாடும் கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும் குப்பையுமாக இருந்திருக்கிறது.
மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை சச்சரவு.
நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில விளக்கேற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
வாசலில் நின்ற லஷ்மி தேவியை பார்த்து, பழுத்த சுமங்கலியாக வந்திருக்கிறீர்கள் உள்ளம் மகிழ்ந்து உள்ளே அழைக்கிறேன் வாருங்கள் என்று அந்த இல்லத்தலைவி அழைத்திருக்கிறார்கள்.
பலகையைப் போட்டு அமர வைத்துவிட்டு உள்ளே போய் பால் எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள் பழுத்து சுமங்கலியாக வந்திருந்த லட்சுமிதேவி இல்லை.
பூஜை அறையில செல்வம் மட்டும் குவிந்து கிடந்திருக்கிறது.
லட்சுமிதேவி எங்கும் எப்பொழுதும் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வருவார்கள்.
அதற்கு, நாம் இல்லத்தையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம் என்பதை உணர்ந்தால்..
ஆரோக்கியம் வரும். ஆரோக்கியம் இருந்தால் ஆயுள் பலம் கூடும். ஆயுள் பலம் கூடினால் செல்வங்கள் சேரும்.
Article By – என். செல்வராஜ்,கோவை.